August 11, 2016 தண்டோரா குழு
அமெரிக்காவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காதல் மனைவி இறந்த 20 நிமிடங்களில் கணவரும் அதே இடத்தில் உயிரிழந்த நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
மேலும் அவர்கள் சிகிச்சை பெற்று வந்த அறையில் இருந்த கடிகாரமும் அதே நேரத்தில் நின்று போனது ஆச்சரியத்தை எற்படுத்தியுள்ளது.
கணவன் மனைவி இடையேயான திருமண பந்தம் இந்தியாவில் அதிகம் போற்றப்படுகிறது. ஒரு பக்கம் விவாகரத்துகள் நிகழ்ந்தாலும் தம்பதிகளிடையேயான ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை அதிகம் கடைப்பிடிக்கப்படுவது நமது தேசத்தில் தான்.
வெளிநாடுகளில் திருமண பந்தத்திற்கு மதிப்பு இருக்காது என்றும் ஆடையை மாற்றுவது போல கணவனையோ மனைவியையோ மாற்றுவார்கள் என்றும் கூறுவதுண்டு. அதையும் மீறி ஒரு சில தம்பதிகள் ஆத்மார்த்தமாக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி மற்றும் ஜேனட் தம்பதிகளுக்குத் திருமணமாகி சுமார் 63 வருடங்கள் ஆகின்றன. கடந்த சில வருடங்களாக மறதி நோயால் அவதிப்பட்டு வந்த ஜேனட், கடந்த 2011ம் ஆண்டு முதல் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கேயே பராமரிக்கப்பட்டும் வந்துள்ளார். தனது மனைவியைத் தினந்தோறும் மருத்துவமனையில் சென்று பார்ப்பதை 86 வயதான ஹென்றி வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹென்றி, தனது மனைவி இருக்கும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை 31ம் தேதி தம்பதிகள் இருவருக்கும் உடல்நிலை மோசமடைந்தது. மனைவிக்கு மரண நேரம் நெருங்குவதை உணர்ந்தார் ஹென்றி. அவர் நினைத்தது போலவே சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலை 5.10 மணியளவில் ஜேனட் மரணமடைந்தார்.
அவரைத் தொடர்ந்து சுமார் 20 நிமிடங்கள் கழித்து ஹென்றியின் உயிரும் பிரிந்தது. மேலும், இருவரும் சிகிச்சை பெற்று வந்த அறையில் இருந்த கடிகாரம் ஹென்றி இறந்த நேரமான 5.30 மணிக்கு மேல் ஓடாமல் அப்படியே நின்றுவிட்டதாக அவருடைய மகன் தெரிவித்தார்.
63 வருடத் தாம்பத்திய வாழ்க்கையில் இணைபிரியாத கணவன், மனைவியாக இருந்த ஹென்றி ஜேனட் தம்பதியினர் மரணத்திலும் இணைபிரியாமல் ஒன்றாகவே இறந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.