August 22, 2016 தண்டோரா குழு
தமிழக காவல்துறையினருக்கு 193 கோடி ரூபாயில் 71 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா இன்று பேரவையில் அறிவித்தார்.அதில் காவலர்களுக்கு இடர்படி,உடைகள் பராமரிப்பு படிகள் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார்.அப்போது, இரு துறைகளுக்குமாக 81 அறிவிப்புக்களை வெளியிட்டார்.காவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு, அவர்களது பதவி மற்றும் பணி பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் மாதந்தோறும் 200 ரூபாயிலிருந்து 3,000 ரூபாய் வரை இடர்படி வழங்கப்படுகிறது.இந்த இடர்படி இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்குக் கூடுதலாக 60 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
காவலர்களுக்கு தற்போது அவர்களது பதவித் தரத்திற்கு ஏற்ப சீருடை மற்றும் உபகரண பராமரிப்புப்படி மாதம் ஒன்றுக்கு 100 ரூபாயிலிருந்து 450 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.இந்த பராமரிப்புப்படி மாதம் ஒன்றுக்கு 100 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்குக் கூடுதலாக 14 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
நக்சலைட் தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் பணியாளர்கள், எல்லையோர மாநிலங்களின் மும்முனை சந்திப்பில் நக்சலைட் ஊடுருவலைத் தடுப்பதற்கும்,மாவோயிஸ்ட்டுகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கும்,அடர்ந்த வனப் பகுதிகளில் தேடுதல் வேட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களின் மனத் திண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு,சிறப்பு இலக்குப் படையினருக்கு இணையாக இவர்களுக்கும் படிகள் வழங்கப்படும்.இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்குக் கூடுதலாக ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.கடலூர் மாவட்டம், திருப்பாப்புலியூர், தேனி மாவட்டம், தேவதானப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் மற்றும் காவலர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை ரயில் போலீசாருக்கு வீடுகள் கட்டப்படும்.அதேபோல, கோயம்புத்தூர் நகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் இணைப்புக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கட்டுமானப் பணிகள் விரைவில் கட்டப்படும்.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஆயுதப்படைப் பிரிவில் ஆயுதக் கிடங்கு மற்றும் படைக்கலன் தொழிற்பட்டறைக்கென கட்டிடம் கட்டப்படும்.
சென்னையில் உள்ள செயலாக்கப் பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் அலுவலகக் கட்டடத்தில் இடப் பற்றாக்குறையைக் களையும் வகையில்,1 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் தற்போதுள்ள கட்டடத்தில் கூடுதல் தளம் கட்டப்படும்.புது வண்ணாரப்பேட்டையில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் சமுதாயக் கூடம் கட்டப்படும்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் மோப்ப நாய் பிரிவிற்கென கட்டிடம் கட்டப்படும்.
திருவள்ளுர் மாவட்டம், வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு 1 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டப்படும்.தஞ்சாவூர் பேராவூரணி காவல் நிலையம், கிருஷ்ணகிரி ஊத்தங்கரை காவல் நிலையம், திருச்சி ஜம்புநாதபுரம் காவல் நிலையம்,அரியலூர் போக்குவரத்து காவல் நிலையம், மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகம், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சிபிசிஐடிக்கு தனி கட்டிடங்கள் கட்டப்படும்.
சாலைகளில் போக்குவரத்து இடையூறுகளை அகற்றுவதற்கு ஏதுவாக 81 லட்சம் ரூபாய் செலவில் 3 கனரக மீட்பு வேன்கள் வாங்கப்படும்.காவலர்கள் விரைந்து செல்ல, ஜீப்புகள், மோட்டார் சைக்கிள்கள், கூரையுடன் கூடிய லாரிகள், காவலர் குடியிருப்புகளுக்கு குடிநீர் லாரிகள், குற்றவாளிகளை அழைத்துச் செல்ல வேன்கள், பெரிய ஜீப்புகள், ஆம்புலன்ஸ்கள், வாங்கப்படும்.
பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு 60 லட்சம் ரூபாய் செலவில் 100 குண்டு துளைக்காத பொதியுறைகள், வெடிகுண்டுகளைக் கண்டறியும் நவீன கருவிகள் வாங்கப்படும்.விஐபிக்கள் வருகை மற்றும் முக்கிய பொது நிகழ்வுகளின் பாதுகாப்பு சோதனையின் போது வெடிமருந்துகள் சம்பந்தப்பட்ட பொருட்களைக் கண்டறிய 51 லட்சம் ரூபாய் செலவில், 3 வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள்,வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் சிறிய ஜாமர், காவலர்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போது தரையில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் மின்னணு சாதனங்களைக் கண்டுபிடிக்க ஏதுவாகக் கருவிகள் ஆகியவை வாங்கித் தரப்படும்.இரவு நேர ரோந்துக்கு பைனாகுலேர் கருவிகள், கேமராக்கள் வாங்கப்படும். தகவல் தொடர்புக்கு வானொலி சாதனங்கள், உபகருவிகள் வாங்கப்படும்.
இயற்கை பேரிடரின் போது மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக 1 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் எடுத்துச் செல்லத்தக்க அளவிலான 100 அவசரக்கால ஒளியூட்டுக் கருவிகள் வாங்கப்படும்.குற்றவங்களை கண்டுபிடிக்க தடயவியல் துறைக்கான நவீன கருவிகள், செல்போன்கள், ஆய்வுக் கருவிகள் வாங்கப்படும்.
ஊர்காவல் படையைப் பலப்படுத்தும் வகையில் 45 லட்சம் ரூபாய் செலவில் கருவிகள் வாங்கப்படும். இவ்வாறு காவல்துறைக்கு மட்டும் 71 அறிவிப்புகள், 193 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவிடப்படும் எனத் தெரிவித்தார்.