November 2, 2016
தண்டோரா குழு
தில்லியில், அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், காற்றில் ஆபத்துக்கு உரிய வகையில் புகை மாசு கலந்துள்ளது, இதற்கு தீர்வு காண, உயர்நிலைக் கூட்டத்தை, அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூட்டினார்.
தில்லியில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், தீபாவளி பண்டிகையின் போது, பொதுமக்கள் அதிக அளவில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
இதனால், நகரின் பெரும்பகுதிகளில் அபாயகரமான அளவில், காற்றில் மாசு கலந்து, சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது. சாலைகளில் புகைப் படலம் காணப்பட்டதால், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் இருந்தது.
இந்நிலையில், அனைத்துத் துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும் உயர்மட்டக் கூட்டத்தை, மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூட்டினார். இதில், மாசுக் கட்டுப்பாடு தொடர்பாக பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு வசதியாக, புதிய, ‘மொபைல் ஆப்’ உருவாக்குவது என, முடிவு செய்யப்பட்டது.
மேலும் இது குறித்து நிருபர்களிடம் சிசோடியா, கூறுகையில், பிரச்னைக்கு தீர்வு காண, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.