November 26, 2016
தண்டோரா குழு
அண்மையில் கர்நாடக மாநில கனிம வள தொழிலதிபரும் அரசியல்வாதியுமான ஜனார்த்தன் ரெட்டியின் மகள் திருமணம் ரூ. 500 கோடியில் ஆடம்பரமாக நடைபெற்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிலும், ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படி ஆடம்பரத் திருமணம் நடந்திருக்கிறது.
அதே நிலையில் குஜராத்தில் வெறும் 500 ரூபாயில் மொத்த திருமணமும் நடந்து முடிந்திருக்கிறது. பங்கேற்ற அனைவருக்கும் விருந்தில் அனைவருக்கும் தேநீரும், தண்ணீரும் மட்டும் வழங்கப்பட்டுள்ளன.
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு திருமணம் நடத்த ஏற்பாடு செய்த பெரும்பாலோனோர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணம், வங்கியில் டெபாசிட் செய்துள்ள பணத்திலிருந்து திருமணச் செலவுக்காக 2.5 லட்சம் ருபாய் வரை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய நிதியமைச்சகம் கடந்த 17ம் தேதி அறிவித்தது. இருப்பினும், இந்தத் தொகையில் நடுத்தர வகுப்பினர் திருமணத்தை நடத்தி முடிப்பது என்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் தக்ஷா, பாரத் பார்மர் தம்பதியினர் தங்கள் திருமணத்தை வெறும் 500 ரூபாய் செலவில் மிகச்சிக்கனமாக நடத்திக் கொண்டுள்ளனர்.
“ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு முதலில் எங்களுக்குக் கவலை தந்தது. பின்னர், திருமணத்தில் மேற்கொள்ளப்படும் பிரம்மாண்டத்தைத் தவிர்த்துவிட்டு, திருமணத்தை எளிமையாக நடத்துவது என்று இரு குடும்பத்தினரும் முடிவு செய்தோம். திருமணத்திற்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு குடிநீர், தேநீர் மட்டுமே வழங்கினோம்” என்றார்.