November 15, 2016 தண்டோரா குழு
வரும் 19-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் சுமார் ரூ. 90 கோடியளவு பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தேர்தல் நடைபெறும் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் பணத்தை வாரி இறைத்து வருகின்றன. ஆனால், தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
தஞ்சாவூரில் ரூ.50 கோடியும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தலா ரூ. 40 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பரப்புரைக் கூட்டங்கள் நடத்தினேன். தேர்தல் நடத்தை விதிகளை மீறி, வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதை தேர்தல் பார்வையாளர்களோ, காவல் துறையினரோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திமுக, அதிமுக இரு கட்சியினரும் கூச்சமோ குற்ற உணர்வோ இல்லாமல் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் அடங்கிய உறைகளை விநியோகம் செய்கிறார்கள்.
ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு கட்சி வேட்பாளர்களும் அந்தத் தாள்களைத் தான் வாக்காளர்களுக்கு வழங்கினார்கள்.
திமுக தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் தலா ரூ.500 எனவும், அதிமுக தஞ்சையில் ரூ.2000, அரவக்குறிச்சியில் ரூ.1500 எனவும் விநியோகித்து வருகிறார்கள். திருப்பரங்குன்றத்திலும் வாக்காளர்களுக்கு இதே அளவுதான் கொடுக்கப்படுகிறது.
பணம் கொடுக்கும் விஷயத்தில் திமுகவும் அதிமுகவும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதில்லை.
இத்தனைக்கும் ஓட்டுக்காகப் பணம் வழங்கிய முறைகேட்டுக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்ட தொகுதிகளிலேயே இப்படி மீண்டும் நடக்கிறது.
ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள வானளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும். இத்தொகுதிகளின் அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்க வேண்டும்”.இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தினார்.