November 10, 2016 தண்டோரா குழு
அமெரிக்காவில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக நடந்த பேரணியின் போது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராகப் பதவி வகிக்கும் ஒபாமாவின் பதவிக் காலம் வருகிற ஜனவரியில் முடிகிறது. அதைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழத்தி, அமெரிக்க அதிபர் பதவியைக் கைப்பற்றினார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சியாட்டல் பகுதியில் பேரணி நடத்தப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். முதல் கட்ட தகவலின்படி 5 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரணிக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து பேசிய ஹிலாரி கிளின்டன் கூறியதாவது:
அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்றதைத் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. தோல்வியால் ஏற்பட்ட வலி மறைவதற்கு நீண்ட காலம் ஆகும்.
அதிபராக வெற்றி பெற்ற டிரம்ப்புக்கு நாட்டின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். நாட்டின் நலனுக்காக இணைந்து பணியாற்ற உள்ளதாக டிரம்ப்பிடம் தெரிவித்தேன்.
இவ்வாறு ஹிலாரி கூறினார்.