November 14, 2016 தண்டோரா குழு
அமெரிக்காவின் 45-வது அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தனது சம்பளமாக ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே வாங்குவதாகவும் விடுமுறை எடுத்துக்கொள்ள போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவியில் இருப்போருக்கு ஆண்டு ஊதியம் 4 லட்சம் அமெரிக்க டாலர் ஆகும். அத்துடன், அவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்வர்.
இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் 45வது அதிபராக பதவியேற்கும் டொனால்ட் டிரம்ப், ஞாயிற்றுக்கிழமை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தான் சம்பளம் வாங்கப்போவதில்லை என்றார்.
அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, கடந்த செப்டம்பரில் இதை ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அதை நினைவுகூர்ந்து, “60 நிமிடம்” நடத்தப்பட்ட பேட்டியில், “நாட்டின் அதிபராக நீங்கள் சம்பளம் வாங்குவீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இல்லை, நான் சம்பளம் வாங்கப் போவதில்லை. ஆனால், நமது நாட்டின் சட்டப்படி ஒரு டாலராவது சம்பளமாக பெற வேண்டும் என்றுள்ளது. எனவே, ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே சம்பளமாகப் பெற்றுக்கொள்வேன்” என்று பதிலளித்தார்.
அதே சமயம் அதிபருக்கு என்ன சம்பளம் என்பதே தெரியாது என்றும் அவர் கூறினார்.
“மற்ற அதிபர்களைப்போல் ஓய்வுக்காக விடுமுறை எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா?” என்ற கேள்விக்கு, “ஏராளமான பணிகள் உள்ளன. மக்களுக்காக அவற்றைச் செய்ய வேண்டியுள்ளது. மேலும், வரிகளை குறைக்கிறோம். மக்கள் நல்வாழ்வுப் பணிகளைச் செய்ய வேண்டும். நிறைய திட்டங்களும் காரியங்களும் நிறைவேற்ற வேண்டியுள்ளதால் பெரிய அளவில் விடுமுறை எடுக்கும் திட்டம் ஏதுமில்லை” என்று பதிலளித்தார்.
அதிபர் பதவிக்கு போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்ப்பாளர் ஹில்லரி கிளிண்டனை தோற்கடித்து, கருத்து கணிப்புகளை தகர்த்து விட்டு கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி வென்றார் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.