October 21, 2016 தண்டோரா குழு
சென்னையில் உள்ள சிப்பெட் தலைமையகத்தைத் தில்லிக்கு மாற்றும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் பிரமதருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
சென்னையில் உள்ள சிப்பெட் தலைமையகத்தைத் தில்லிக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. இதற்கு தமிழக மக்களும், தொழிற்சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தலைமையகத்தை மாற்ற வேண்டும் என்பது பிற்போக்கான முடிவு. உரிய காரணம் இல்லாமல் தலைமையகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிப்பெட், மத்திய வேதியியல் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இது சங்கப் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, சிப்பெட் தலைமையகம் சென்னையில்தான் இருக்க வேண்டும். மிகப்பெருமை வாய்ந்த இந்த நிறுவனம், இந்தியாவின் முக்கிய நகரங்களில் 27 இடங்களில் உள்ளது. இங்கு 3500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஆறாயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிறுவனம் லாபத்தில் இயங்கி வருகிறது.
சர்வதேச அளவிலும் சிப்பெட் பெயர் பெற்றுள்ளது. சர்வதேச அளவிலான தரத்திலும், உபகரணங்களுடனும் சென்னையில் அமைந்துள்ளது. முன்னர் வாஜ்பாய் ஆட்சியின் போது, இந்நிறுவனத்தை மாற்ற முயற்சி நடந்தது.
அப்போது, தி.மு.க., தலைமையிலான அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த சிப்பெட் நிறுவனம் சென்னையில் தான் இருக்க வேண்டும். இந்த நிறுவனம் தலையிட்டு, நிறுவனத்தைத் தில்லிக்கு மாற்றும் முயற்சியை உடனடியாக கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.