September 29, 2016 தண்டோரா குழு
இந்திய எல்லையின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படைகள் புதன் இரவு அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. ஐந்து பயங்கரவாத முகாம்கள் இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஞ்ச் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் இருவர் உயிரழந்து இருப்பதாகவும் , ஒன்பது வீரர்கள் படுகாயமடைந்து உள்ளதாகவும், அந்நாட்டு ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்திய ராணுவம் நடத்திய இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் எங்கள் நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் மக்களை காப்பாற்ற இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உரி ராணுவ முகாம் தாக்குதல் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் காஷ்மீர் பிரச்சினையில் இருந்து உலகத்தின் கவனத்தை திசை திருப்புவதற்காக உரி ராணுவ முகாம் தாக்குதலை இந்தியா தான் நடத்தி உள்ளது.காஷ்மீர் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதத்தில் எங்கள் மீது இந்தியா போரை திணித்தால், அந்த நாட்டை நாங்கள் அழிப்போம் என கூறியுள்ளார்.
தற்போது பாகிஸ்தான் பிரதமரும் இந்திய மீது தாக்குதல் நடத்துவோம் என கூறியிருப்பது உலக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரி ராணுவ முகாம் தாக்குதல் குறித்து இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் தூதரை அழைத்து ஆதாரங்கள் வழங்கியுள்ளது அதனை பாகிஸ்தான் ஏற்க மறுத்தது குறிப்பிடதக்கது.