July 29, 2016
தண்டோரா குழு
கரூரில் மது போதையில் நடைபெற்ற சண்டையில் ஒருவர் உயிரிழப்பு. போலீசார் உடலை மீட்டனர் விசாரணை.
கரூர் பேருந்து நிலையத்தில் தின்பண்டங்கள் விற்கும் கடை மற்றும் கரும்பு பால் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் கரூர் மாவட்டம் மாயனூரை அடுத்த மேலமுனையனூரை சார்ந்த ஈஸ்வரனும், கரூர் நகர் படிக்கட்டுத்துறையை சார்ந்த பிரசாந்த் என்ற இளைஞர்களும் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிளவில் ஈஸ்வரன் மது போதையில் தனது நண்பரான பிரசாந்தை வம்புக்கு இழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு பின்பு அடிதடியாக மாறியுள்ளது.
அப்போது அருகில் இருந்த கட்டையை எடுத்து பிரசாந்த் ஈஸ்வரனைத் தாக்கியுள்ளார். அப்போது மயக்கமடைந்த ஈஸ்வரன் கீழே விழுந்துவிட்டார். போதை தெளிந்தவுடன் எழுந்து சென்று விடுவார் என்று எண்ணி பிரசாந்த் சென்று விட்டார்.
மீண்டும் காலையில் பார்த்த போது எழுந்து செல்லாமல் படுத்திருந்தவரை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்துள்ளனர். இது தொடர்பாக நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக நேற்றைக்கு முதல் நாள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி ஈஸ்வரன் அதிகாலை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இறந்து போன ஈஸ்வரனின் உறவினர்கள் உடலை மாயனூரை அடுத்த மேல முனையனூரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து வந்து இறுதிச் சடங்கு நடத்தி வந்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஈஸ்வரனைத் தாக்கிய அவரது நண்பர் பிரசாந்தை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டிற்குப் போட்ட சண்டை விபரீதத்தில் முடிந்ததை எண்ணி தற்போது அப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.