June 18, 2016 தண்டோரா குழு
தன்னுடைய கனவை நனவாக்க 68 வயதுடைய துர்கா காமி பள்ளிக்குச் சென்று வருகிறார். பள்ளிக்குச் செல்ல வயது ஒரு தடை அல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே பள்ளிக்குச் சென்று வருகிறார்.
சிறு வயதில் வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டதால், தான் ஒரு ஆசிரியராக வேண்டும் என்னும் கனவை நிறைவேற்ற முடியவில்லை எனத் தெரிவித்த காமி, தற்போது பள்ளிக்காவது சென்று படிக்கவேண்டும் என்று நினைத்துப் படிக்கிறார்.
தற்போது 68 வயது நிரம்பிய இவர் 6 பிள்ளைகளுக்குத் தந்தை. மேலும் 8 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். மகன்கள் மற்றும் பேரன் பேத்திகள் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி இறந்த பிறகு தனிமையை உணர்ந்துள்ளார்.
வயது இருந்த பொது குடும்பத்திற்காக உழைப்பதிலேயே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்திய இவர் தற்போது தன்னுடைய நிறைவேறாத ஆசையின் ஒரு பகுதியான படிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக வாரம் ஆறு நாட்கள் பள்ளி சென்று வருகிறார்.
தினமும் சுமார் ஒரு மணி நேரம் நடந்தே பள்ளிக்கு செல்கிறார் காமி. அங்குச் சென்ற பிறகு அவருடைய வகுப்பு தோழர்களுடன் படிப்பிற்கும் விளையாட்டிற்கும் தனது நேரத்தைச் செலவிடுகிறார்.
காமியின் அமைதியான ஒரு அறையும், மழைநீர் ஒழுகும் கூரையும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் அவருடைய வீட்டைக்காட்டிலும் ஆரவாரம் உள்ள பள்ளியையே அதிகம் விரும்புவதாக அவர் கூறுகிறார்.
முதலில் கஹரே ஆரம்ப பள்ளியில் சேர்ந்து ஐந்து ஆறு வயது மாணவர்களுடன் எழுதப் படிக்க கற்க ஆரம்பித்த இவர் பின்னர் 5ஆம் வகுப்பை முடித்தார். தற்போது 15 வயது மாணவர்களுடன் பயின்று வருகிறார்.
பள்ளி சீருடை மற்றும் படிப்பு சம்பந்தப்பட்ட பொருள்களை இலவசமாக வழங்கும் ஸ்ரீ கால பிராப் பள்ளிக்கு காமியைப் படிக்க வருமாறு அப்பள்ளியின் ஆசிரியர் டி.ஆர்.கொய்ராலா அழைப்பு விடுத்திருந்தார். காமியும் அவருடைய அழைப்பை ஏற்று அப்பள்ளியில் சேர்ந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த கொய்ராலா தன்னுடைய தந்தைக்கு ஒப்பான ஒருவருக்குக் கல்வி கற்றுத்தருவது இதுவே முதல் முறை எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது தனக்கு மிகுந்த சந்தோசத்தை தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் பள்ளியின் உதவித் தொகையில் உணவு பட்டியல் இல்லை. அரிசி மற்றும் புளிக்கவைத்த பச்சை காய்கறிகள் கொண்ட உணவான குன்றுக்கை காலையில் உண்ணும் காமிக்கு, இந்த உணவே இரவு வரை போதுமானதாக இருக்க வேண்டும் என்று கொய்ராலா தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவருடன் பயிலும் சாகர் தாப்பா, சக மாணவர்கள் காமியை தந்தை என்ற பொருள்படும் “பா” என்றே அழைத்து வருகின்றனர். வயதைப் பொருட்படுத்தாமல்
அனைத்து வகையான விளையாட்டிலும் கலந்து கொள்வார். இந்த வயது முதிந்தவர் ஏன் பள்ளிக்கு வருகிறர் என்று தான் யோசித்து உண்டு. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருடைய தோழமையை அதிகமாக விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் படிப்பில் கொஞ்சம் பலவீனமாக இருக்கிறார் என்றும் சக மாணவர்கள் அவருக்கு உதவி
செய்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். தன்னுடைய இறப்பு வரை தான் படிக்க விரும்புவதாகவும் வயது தடையை உடைத்து தாங்கள் செய்ய நினைக்கும் காரியத்தை தைரியத்துடன் செய்ய உக்கமூட்டவும், வயது முதிர்ந்து வெள்ளை தடியுடன் ஒருவர் பள்ளிக்கு செல்வதைப் பார்க்கும் போது மற்றவர்களும் ஊக்கமடைவார்கள் என்று தான் நம்புவதாகவும் காமி
நம்பிக்கை தெரிவித்துள்ளார்.