December 12, 2017 தண்டோரா குழு
தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குநர் எட்வின் ஜோவின் நியமனத்தை ரத்து செய்து, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக மருத்துவ கல்வி இயக்குனராக பணிபுரிந்த டாக்டர் விமலா ஓய்வு பெற்றதால், கோவை அரசு மருத்துவமனை டீனாக பணிபுரிந்த டாக்டர் ஏ.எட்வின்ஜோ 25.4.2017-ல் மருத்துவ கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.இவரது நியமனத்தை எதிர்த்து கரூர் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அம்மனுவில், எட்வின்ஜோ தம்மை விட 7 ஆண்டுகள் பணிக்கு இளையவர் என்றும், எனவே பணிமூப்பு அடிப்படையில் மருத்துவக்கல்லூரி இயக்குநராக தம்மை தான் நியமனம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், எட்வின் ஜோவின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜெ.அப்துல்குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ கல்வி இயக்குனராக எட்வின்ஜோ நியமிக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை, மருத்துவ கல்வி இயக்குனர் பணி மூப்பு பட்டியல் தொடர்பான அரசாணைகள் ரத்து செய்யப்படுகிறது.
ரேவதி கயிலைராஜனை மருத்துவ கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. ரேவதி கயிலைராஜனை மருத்துவ கல்வி இயக்குனராக நியமனம் செய்வது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை செயலர் 6 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.