December 8, 2016 தண்டோரா குழு
இதுவரை தேர்தலில் போட்டியிடாமல் இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அவர்களுக்கு நன்கொடை அளிப்பவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்கும்படி தேர்தல் ஆணையத்தின் மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நஜீம் ஜைதி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிகையில் கூறியிருப்பதாவது;
இந்தியாவில், 1900 அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் இவற்றில், 400 கட்சிகள் இதுவரை எந்த தேர்தலில் போட்டியிட்டதே இல்லை. கறுப்புப் பணத்தை வெள்ளை ஆக்குவதற்காக இந்த கட்சிகள் துவங்கப்பட்டுள்ளனவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் பெறும் நன்கொடை மற்றும் நிதிக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் வருமான வரி விலக்கு பெறுவதற்காக மட்டுமே நடத்தப்பட்டு வரும் அரசியல் கட்சிகளை கண்டறியும் பணியை துவக்கி உள்ளோம். அவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது என்பது நீண்ட நடைமுறை. அதனால் தற்போதைக்கு இது போன்று தேர்தலில் போட்டியிடாமல் இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அவர்களுக்கு நன்கொடை அளிப்பவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்கும்படி தேர்தல் ஆணையத்தின் மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
இனி, இது போன்ற அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பணி ஆண்டுதோறும் நடத்தப்படும்.இவ்வாறு அறிகையில் கூறப்பட்டுள்ளது.