July 6, 2016 தண்டோரா குழு
தாய்லாந்தில் காலை இழந்த ஒரு யானைக்கு ஒன்பதாவது முறையாகச் செயற்கைக்கால் பொருத்தப்பட்டது.
மோஷா என்ற பெயருள்ள இந்த யானை 10 வருடங்களுக்கு முன்பு தாய் மியன்மார் எல்லையில் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் சிக்கித் தனது காலை இழந்தது.
இந்த விபத்து நடைபெறும் போது யானைக்கு 7 மாதங்களே ஆகியிருந்தது. யானைக்கு அடிபட்டவுடன் சிகிச்சைக்காக வடக்கு தாய்லாந்தில் லாம்பங்க் மாகாணத்திலுள்ள ஏசியன் எலிபன்ட் ஃபௌண்டேஷன் நடத்தும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டது.
செயற்கைக்கால் பொருத்தும் முன் யானை நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டது எனவும். சாய்ந்து சாய்ந்து நடந்தபடியால் சமநிலையில்லாமல் யானையின் முதுகெலும்பு வளைந்து அதன் உயிருக்கே பாதகம் ஏற்படும் நிலை ஏற்பட்டது என தெர்ட்சை என்பவர் தெரிவித்தார்.
இந்த யானை முதல் செயற்கைக்கால் பொருத்தும் போது 600 கிலோ எடை இருந்ததாகவும் தற்போது 2,000 கிலோவிற்கும் மேல் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த யானைகள் மருத்துவமனை உலகத்தின் முதல் யானைப் பராமரிப்பு மருத்துவமனை ஆகும். 1993ம் ஆண்டு நிறுவப்பட்ட இம்மருத்துவமனையில் 17 யானைகள் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுபான்மை இன போராளிகளுக்கும், மியன்மார் ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாகப் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளின் பல இன்னும் தாய் மியன்மார் எல்லையில் புதைந்துள்ளது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.