December 7, 2016 தண்டோரா குழு
மூத்த பத்திரிகையாளர் “சோ” ராமசாமியின் மறைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “கருத்து வேறுபாடு உடையவர்களும் அவரை மதிப்பார்கள். அப்படிப்பட்ட திறமை வாய்ந்தவர் சோ” என்று புகழாரம் சூட்டினார்.
இது குறித்து கி .வீரமணி செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசியதாவது;
சோ மிக வெகுளியாக எதனையும் சொல்லக் கூடியவர். கடுமையான கருத்துகளைக் கூட வேகமாக கூறிவிட்டு, பின்னர் நகைச்சுவையாக மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவர். இவ்வாறு அவர் செய்வது, சில நேரங்களில் கடும் மருந்தினை கொடுத்துவிட்டு பக்க விளைவுகள் வராமல் இருக்க இன்னொரு மருந்தை கொடுப்பது போல.
நெருக்கடி காலத்தை நேரடியாக அவர் எதிர்த்தவர் என்பதுதான் நாங்கள் விரும்பக் கூடிய ஒன்றாகும். அந்த வகையில் நண்பர் சோவைச் சந்திக்கும் போதெல்லாம் நாங்கள் ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வோம்.
அண்மைக் காலத்தில்தான் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் பார்க்க முடியாமல் போய்விட்டது. “வெளிநாட்டிற்குச் சென்றாவது அவருக்குச் சிகிச்சை அளித்து வாருங்கள்” என்று அவரது உதவியாளரிடம் நான் சொல்லிக் கொண்டே இருப்பேன்.
ஆனால், சோ அதை விரும்பவில்லை. பிடிவாதமாக இங்கேயே இருந்து இந்த மண்ணிலே அவரது உயிர் பிரிந்திருக்கிறது.
எவ்வளவு கடுமையாகப் பேசினாலும், அவரது கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டார். துக்ளக் பத்திரிகை சினிமாவை அடிப்படையாகக் கொண்டோ, சோதிடத்தை அடிப்படையாகக் கொண்டோ நடத்தப்படவில்லை.
அரசியல் விமர்சனங்களை மட்டுமே நம்பி இருக்கக் கூடிய தனித்தன்மையான பத்திரிகையாகும். அப்படி ஒரு பத்திரிகையை நடத்துவது அவ்வளவு எளிமையானதும் அல்ல. அதனை சோ செய்தார். அதன் மூலம் தனித்தன்மையைக் காப்பாற்றினார்.
கருத்து வேறுபாடு உடையவர்களும் அவரை மதிப்பார்கள். அப்படிப்பட்ட திறமை வாய்ந்தவர். அந்த திறமை தற்போது ஓய்வெடுத்துக் கொண்டது என்றார் கி. வீரமணி.