February 25, 2017 தண்டோரா குழு
சர்வதேச அளவில் சராசரியாக 40 விநாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிக்கை தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை இந்தியா போன்ற நாடுகளில் அதிகமாக உள்ளது. 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இந்தியாவில் 5,66,75,969 பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று கோடிக்கும் மேற்பட்டோர் மனநலக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இந்திய மக்கள் தொகையில் 4.5 சதவீதம் ஆகும்.
உலகம் முழுவதும் சுமார் 32 கோடிக்கும் மேற்பட்டோர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கு மோற்பட்டோர் தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய பசிபிக் நாடுகளில் வசித்து வருகின்றனர். இந்தியா, சீனா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
2015-ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 7,88,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பலர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். அதே போல், 2005-ம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதும் மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 18.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதில் 15 வயது முதல் 29 வயதுடைய இளம் பருவத்தினரே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். மன அழுத்த நோயால் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சர்வதேச அளவில் சராசரியாக 40 விநாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்”
இவ்வாறு உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.