November 2, 2016 தண்டோரா குழு
இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள “ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம்” திட்டத்தில் உள்ள குறைகளைப் போக்க வலியுறுத்தி, முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு செய்து கொண்டதாக போலீசார் கூறினர்.
அவர் பெயர் ராம் கிஷன் க்ரேவால். ராணுவத்தில் ஜவானாகப் பணியாற்றினார்.அவர் எழுதிய தற்கொலைக் கடிதத்தில், “ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தற்கொலை செய்து கொள்கிறேன்” என்றும் ஓய்வு பெற்ற மற்ற ராணுவ வீரர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
தில்லி ஜவஹர் பவன் பின்புறம் புல்வெளியில் விஷமருந்திய நிலையில் அவர் இறந்துகிடந்தார்.
ஒரே பதவி – ஒரே ஓய்வூதியத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பலர் வீரர்கள் புதுதில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் (70) பங்கேற்றிருந்தார். இந்நிலையில், ஹரியானா மாநிலம், பிவானி மாவட்டம், பூம்லா கிராமத்தில் வசிக்கும் தனது குடும்பத்தாரை கைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார் ராம் கிஷன். அப்போது, “ஒரே பதவி – ஒரே ஓய்வூதியத்தை” வலியுறுத்தி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.இதைக் கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக முன்னாள் படைவீரர் நலத்துறையிடமிருந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் விவரங்களைக் கேட்டறிந்திருப்பதாகத் தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “விவசாயிகளும், ராணுவவீரர்களும் இவ்வாறு தற்கொலை செய்துகொள்வது மோடியின் அரசில் அடிக்கடி நடக்கிறது. ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற திட்டம் தொடர்பாக பிரதமர் பொய் கூறி வருகிறார் என்பது தெரிகிறது. திட்டத்தை அமல்படுத்தியிருந்தால், ராம்கிஷன்ஜி ஏன் தற்கொலை செய்திருப்பார்..” என்று டுவிட்டரில் கூறினார் அவர்.
“இந்திய வீரர்கள் வெளிநாட்டு எதிரிகளுக்கு எதிராக எல்லையில் சண்டையும், தங்கள் உரிமைகளுக்காக அவர்கள் உள்நாட்டிலும் போராடுகிறார்கள். முழு தேசமும் அவர்கள் உரிமைகளுக்காக எழுந்து நிற்க வேண்டும்” என்றார் கேஜ்ரிவால்.
ஒரே பதவி – ஒரே ஓய்வூதியத்திற்காக முதல் தவணையாக 5,500 கோடி ருபாய் செலுத்தப்பட்டது என்றும், இதனால் கடந்த 40 ஆண்டுகளாக பிரச்சனையில் இருந்த முன்னாள் ராணுவத்தினருக்கு தந்த வாக்குறுதியை தான் நிறைவேற்றிவிட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.