May 25, 2016 தண்டோரா குழு
பல முறை விண்ணப்பித்தும் நிவாரணம் கிடைக்காததால் தனது விவசாயத்திற்குத் தானே அணை கட்டிக்கொண்டார் 42 வயதான சஞ்ஜய் டிக்டெ என்ற மகாராஷ்டிர விவசாயி.
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வறட்சி தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது. அதில் மகாராஷ்டிர மாநிலமும் விதிவிலக்கல்ல.
அகோலா மாவட்டத்தில் சாங்கவி துர்க்வாடா என்ற இடத்தில் 30 ஏக்கர் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் சஞ்ஜய் டிக்டெவும் அவரது சகோதரரும். இதில் சோயா பீன்ஸ்ம், பருத்தியும் பயிரிடுவது வழக்கம். இவர்களது நிலத்தின் வழியாக ஒரு கால்வாய் ஓடுகிறது.
மழைக் காலத்தில் கால்வாயில் நீர் போக்குவரத்து அதிகரிப்பதால் பயிர்கள் நாசமடைந்து ஆண்டு தோறும் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. உபரி நீரைத் தேக்கும் வண்ணம் ஒரு அணை கட்டுமாறு அரசுக்குச் சகோதரர்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பல கோடி ரூபாய் நிவாரண நிதிக்காக அரசு செலவு செய்த போதிலும் ஏனோ இவர்களது தேவை பூர்த்தியடையவில்லை.
எனவே சகோதரர்கள் இருவரும் தங்களது தேவையைத் தாங்களே பூர்த்தி செய்ய முடிவெடுத்தனர். தங்களது நிலத்தில் 10 ஏக்கர் நிலத்தை 55 லட்சத்திற்கு விற்று அதில் 20 லட்சத்தை உபயோகித்து 3 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட அணையைக் கட்டத் தொடங்கியுள்ளனர்.
மார்ச் மாதம் தொடங்கிய இந்த வேலை மழைக் காலத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். பணி முடிவடைந்தவுடன் 3 போகம் எடுக்கலாம் என்பது இவர்களது கணிப்பு.
தங்களுடைய சொந்தப் பணத்தைச் செலவழித்து எடுக்கும் இந்த முயற்சிக்கு அரசு அதிகாரிகளில் சிலர் மிகுந்த உறுதுணையாகவும், மற்றும் சிலர் முட்டுக்கட்டை போடுபவர்களாகவும் இருக்கின்றனர்.
அதே சமயம் அருகில் உள்ள மக்களில் சிலர் கட்டுமானப் பணிக்கு உபயோகிக்கும் மணல் தரமானது இல்லை என்றும், சட்டத்திற்குப் புறம்பாக மணல் எடுக்கப்படுகிறது என்றும் குற்றம் சாட்டுவதோடு, புகாரும் கொடுத்துள்ளனர். வேறு சிலரோ, ஊக்கமூட்டுபவர்களாகவும் செயல் படுகின்றனர் என்றும் சஞ்ஜய் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணி முடிவுற்றால் சஞ்ஜயின் நிலம் மட்டுமின்றி ஊரே பலனடையும் என்று விஷயமறிந்தோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதன் காரணமாக அரசின் கவனமும், மக்களின் கவனமும் சஞ்ஜயின் பக்கம் திரும்பத் துவங்கியுள்ளது.