January 19, 2018 தண்டோரா குழு
டெல்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு உடல் திருப்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது.
திருப்பூர் பாரப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வமணி என்பவரது மகன் சரத்பிரபு.இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியின் கீழ் உள்ள யுசிஎம்ஸ் கல்லூரியில் எம்.டி மருத்துவ படிப்பினை மேற்கொண்டு வருகிறார்.பள்ளிபடிப்பை ஊட்டி மற்றும் ராசிபுரம் பகுதியில் கற்ற இவர் கோவை மருத்துவமனையில் மெரிட் அடிப்படையில் கல்வி பயின்றார்.
இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி காலையில் அவர் தனது விடுதி அறையில் பிணமாக இருந்துள்ளார்.இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த கல்லூரியினர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இத்தகவல் அறிந்த அங்கு சென்ற சரத்பிரபுவின் தந்தை அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதை தெரிவித்ததையடுத்து 3 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்து அவரது உடலை டெல்லி விமான நிலையத்திலிருந்து கோவை வழியாக திருப்பூர் அனுப்பிவைத்தனர் .
இதனையடுத்து திருப்பூர் பாரப்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு வரப்பட்டது.அவரது உடலுக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி , தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர்,அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் பேசிய சரத்பிரபுவின் தந்தை சரத்பிரபு தனது கைப்பேசியில் இறந்த பின்பான சில போட்டோக்களை காண்பித்து ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்த அவரது உடலில் கழுத்து ,தலை மற்றும் கை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும் , இதனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி முறையிட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,
மருத்துவமாணவர் சரத்பிரபு மரணம் வேதனையளிப்பதாகவும்,பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் , பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை தெரிந்துவர முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும்,பெற்றோர்கள் மரணத்தில் ஏற்பட்டுள்ள உள்ள சந்தேகங்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்ட துறையினரிடம் எடுத்து சென்று நீதிகிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,
தமிழக அரசு உடனடியாக வெளிமாநிலங்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.வெளிமாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்காக அந்தந்த மாநிலங்களில் ஆலோசனை மையத்தினை அமைத்திட வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்.இந்த விசயத்தில் மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் நசுரூதீன்,
திருப்பூர் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அவர்களது குடும்பத்தினர் மட்டுமல்லாது , அனைத்து மருத்துவர்களையும் கவலைக்குள்ளாகியுள்ளது .சரவணன்,சரத்பிரபு இருவரது மரணத்திலும் தற்கொலைக்கான காரணங்கள் இல்லாததால் விசாரனை முடிந்தபின்பே முழுத்தகவல் தெரியவரும்.