June 30, 2016
தண்டோரா குழு
இந்தோனேசியாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் தான் தற்போது உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவனாகத் திகழ்கிறான்.
இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் வசித்து வரும்ரொக்கையா(35) அடே சொமன்ட்ரி(45) தம்பதியரின் இரண்டாவது மகன் தான் ஆர்யா பெர்மனா. பிறந்த போது சாதாரணமான 3.2 கிலோ எடையுடன் பிறந்த இச்சிறுவன் தற்போது 192 கிலோ எடையுடன் உள்ளான். அவன் தினந்தோறும் 5 வேளை உணவு உண்கிறான்.
மீன் மாட்டிறைச்சி, காய்கறி, சூப் போன்றவற்றை விரும்பி உண்ணும் ஆர்யா சராசரியாக ஒரே நேரத்தில் இருவருக்கு போதுமான உணவை உண்கிறான். நீண்ட தூரம் நடக்கக்கூட முடியாத இச்சிறுவனின் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டனர் இவனது பெற்றோர். மேலும், இவனுக்குப் பொருந்தக்கூடிய உடைகளை வாங்கிக் கொடுக்க முடியாததால் இவனுக்கு லுங்கியை வாங்கி உடுத்தக் கொடுக்கின்றனர்.
சிறுவனின் உடல் எடை இப்படியே கூடிக்கொண்டு சென்றால் அவன் உயிரிழக்க நேரும் எனப் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். இதனால் ஆர்யாவிற்கு வழங்கும் உணவின் அளவைக் குறைந்து விட்டனர்.
தினமும் உண்பதிலும் உறங்குவதிலுமே நேரத்தைச் செலவிடுவதாகவும் சில நேரங்களில் குழியல் தொட்டிக்குள் சென்று படுத்துக்கொள்வதாகவும் அவனது அம்மா தெரிவித்துள்ளார். மேலும், அவனுக்கு இரண்டு வயது ஆன போது வயதுக்கு ஏற்ற உடல் எடையைக் காட்டிலும் அதிகமாக இருந்துள்ளது என்றும் தொடர்ச்சியாக அவனது எடை அதிகரித்துக் கொண்டே வருவதாவும் விவசாயம் செய்து வரும் தனது கணவரால் மகனுக்கு போதிய உணவை வாங்கிக் கொடுக்கவே போதுமான பணம் இல்லை எனக் கூறினார்.
இதுமட்டுமின்றி சில சமயங்களில் தனது மகனின் உணவுக்காகக் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆர்யாவின் தந்தை கூறும்போது, உடல் எடை அதிகரித்துக் கொண்டே செல்வதால் அவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தோம் ஆனால் அங்கு அவனுக்குக் குறைபாடுகள் எவையுமில்லை எனவும் பணவசதி இருந்தால் பெரிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று காண்பிக்கும் மாறும் மருத்துவர்கள்
கூறியுள்ளனர்.
மேலும், தன்னால் அதிகளவிலான மருத்துவ செலவுகளை மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளதாகவும் ஏனைய சிறுவர்களை போன்று தனது மகனையும் பார்க்கக்கூடிய வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக ஆர்யாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆர்யாவின் பெற்றோர்கள் தற்போது அவனுக்குக் கட்டுப்பாடான உணவு வகைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், தற்போது இச்சிறுவன்சு வாசிப்பதற்கு கூடச் சிரமப்பட்டு வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.