August 22, 2016 தண்டோரா குழு
உரிமம் இல்லாமல் வண்டியோட்டிய சிறுவனைத் தண்டிப்பதை விட அதைக் கண்டு கொள்ளாமல், கண்டிக்கத் தவறிய தந்தைக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராஜேஷ் தொலய்ன் மகன் 2015ம் ஆண்டு அந்தெரி வெர்சொவின் புறநகர்ப் பகுதியான லொகண்ட்வலா பகுதியில் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.உரிமம் பெறத் தக்க பிராயம் அடையாத காரணத்தினால் உரிமம் இன்றி, தனது நண்பனுடன் பயணம் செய்துள்ளார்.
எதிர்பாராதவிதமாக கார் தெருவை நடுவில் பிரிக்கும் சுவர் மீது மோதி கூட இருந்த அவரது நண்பரைக் காயப்படுத்தியுள்ளது.நண்பரின் தந்தை மகனை மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததோடு,ராஜேஷ் மகன் மீது அலட்சியமாக வண்டி ஒட்டியதாகக் குற்றஞ்சாட்டி, வெர்சொவா காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
பின்னர் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு புகாரை திரும்பப்பெற உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
நீதிபதி நரெஷ் பட்டில் தலைமையில் விசாரிக்கப்பட்ட இவ்வழக்குக்கு,மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் வகையில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதாவது காரின் சொந்தக்காரர் தனது மகனை உரிய வயதிற்கு முன்பே ஓட்ட அனுமதித்துள்ளார். அது சட்டப்படி குற்றம்.அதன் காரணமாக காரினுள் அமர்ந்திருந்த சிறுவனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
இதுவே வேறு சமயத்தில் அருகில் உள்ள பாதசாரிகளையோ, மற்ற மூன்றாவது நபர்களையோ பாதிக்க வாய்ப்புள்ளது.எனவே இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காவண்ணம் தடுக்க வேண்டும் என்றால் பெற்றோர்களின் கண்டிப்பு இறுக வேண்டும்.அதன் பொருட்டே தந்தைக்கு அபராதம் விதிக்கும் பட்சத்தில் தனயனை நேர்வழிப் படுத்தலாம் என்ற எண்ணத்தில் நீதிமன்றம் ராஜேஷ் 50,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.
கான்ஸர் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மையமான டாடா மெமொரியல்
ஹொஸ்பிடல்க்கு 2 வாரங்களுக்குள் இத்தொகையை வைப்புத் தொகையாக சேர்ப்பிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
சமூக நலத்தோடு ஒட்டி முன்னுதாரணமாகத் திகழும் வகையில் குற்றத்திற்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது பாராட்டத்தக்கது என்பது பலரின் கருத்து.