August 5, 2016 தண்டோரா குழு
29 பேருடன் மாயமான விமானப் படை விமானத்தைத் தேடும் பணியில் மேலும் 2 கப்பல்களை ஈடுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து 29 பேருடன் அந்தமான் புறப்பட்ட விமானப் படைக்கு சொந்தமான ஏ.என் 32 ரக விமானம் மாயமாகி 15 நாட்களாகியும், விமானம் குறித்து எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
போர்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், விமானங்கள் உள்ளிட்டவற்றின் உதவியோடு தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றாலும் விமானத்தைக் கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது. நட்புறவு பயணமாக இந்தியா வந்த ரஷ்ய நாட்டின் அதிநவீன கப்பலான இகோர் பிலோசோவும் கடந்த 2 நாட்களாகத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
கடலுக்குள் மூழ்கும் கப்பல்களையே கண்டறியும் வசதி கொண்ட மேற்கண்ட ரஷ்ய கப்பல் மூலம் நடைபெற்ற தேடுதல் பணியும் பலன் தரவில்லை. இதனையடுத்து இந்திய கடல்சார் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் சமுத்திர ரத்னாகர் மற்றும் சாகர் நிதி ஆகிய கப்பல்களை மாயமான விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.