December 1, 2016 தண்டோரா குழு
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனல்ட் டிரம்ப், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைக் பென்ஸ் ஆகியோருடன் இரவு உணவில் பங்கேற்க ரூ. 7 கோடி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “மெழுகுவர்த்தி வெளிச்ச விருந்து” (கேன்டில் லைட் டின்னர்) எனப்படும் இந்த விருந்தில் பங்கேற்போர் அளிக்கும் நிதி தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும். இத்தகவலை “வாஷிங்டன் போஸ்ட்” இதழ் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் போட்டியில் வெற்றி பெற்ற டொனல்ட் டிரம்ப் ஜனவரி மாதம் 2௦ம் தேதி பதவி ஏற்கவிருக்கிறார். அவருடனும் அமைச்சரவை வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் இரவு விருந்து கொண்டாடும் செலவு ஏழு கோடி ருபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதவி ஏற்பு விழாவிற்கு டிரம்ப்பின் ஆதரவாளர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும். மேலும், டிரம்ப், அவரது மனைவி மெலானியாவோ, துணை அதிபராக இருக்கும் பென்ஸ், அவரது மனைவி கரேன் உடன் சிறப்பு விருந்தில் பங்கேற்க எட்டு டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழா கமிட்டி, நிதி திரட்ட தொடங்கியுள்ளது. பொதுவாக அமெரிக்காவில் அதிபர் பதவி ஏற்கும் விழா அரசு செலவில் நடைபெறாது. மாறாக தனி நபர்கள் மற்றும் நிறுவங்களிடம் இருந்து பெறப்படும் நிதியைக் கொண்டுதான் நடைபெறும். 2013ல் அதிபர் பாரக் ஒபாமா இரண்டாவது முறையாகப் பதவியேற்ற விழாவின் போது அவ்வாறே செய்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கேபினட் அமைச்சரவை மற்றும் மேலவையின் தலைவர்களுடன் ஒரு பிரத்தியேக மதிய உணவும், பென்ஸ் குடும்பத்தினருடன் ஒரு இனிய இரவு, டிரம்ப் மனைவியின் குடும்பத்தினருடன் மதிய உணவிற்கு எட்டு டிக்கெட்டுகள், அதிநவீன சொகுசு நட்சத்திர விடுதியில் நடக்கும் நடன விழாவிற்கு எட்டு டிக்கெட்டுகள் அவர்களுக்குக் கிடைக்கும்.
அதிபர் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகளில் திட்டத்தை நிறைவேற்றத் தேவையான அளவுக்கு அதிகமாக நிதி கிடைத்தால், அவை அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும்.
உயர் நிர்வாக அதிகாரிகளுடன் வசதி படைத்த ஆதரவாளர்கள் சங்கமமாகும் வாய்ப்புகளை இதற்கான குழு வழங்கி வருகிறது. 25,000 அமெரிக்க டாலர் முதல் 1 கோடி அமெரிக்க டாலர் வரை ஒவ்வொரு நிலைக்கேற்ப வெகுமதிகள் வழங்கப்படும்.
குறைந்தது ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கொடுப்பவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை உறுப்பினர்களுடன் கொள்கை விவாதம் மற்றும் இரவு உணவிற்கு இரண்டு டிக்கெட் ஆகியவை கிடைக்கும்.
2013 ஆம் ஆண்டில், ஏடி&டி, போயிங், செவ்ரோன், மற்றும் மைக்ரோசாப்ட்ட ஆகிய நிறுவனங்களிடமிருந்து ஒபாமாவின் குழு 44 கோடி அமெரிக்க டாலர் நிதி சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.