July 8, 2016 தண்டோரா குழு
சுமார் 200 தாவர வகையைச் சேர்ந்த 6,47,250 மரங்களை ஒரே தடவையில் ஆயிரக்கணக்கான மக்கள் நட்டு இந்த சாதனையைப் படைத்திருப்பதாக எக்குவடோர் அதிபர் ரஃபேல் கொர்ரேயா பெருமையோடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவல் தனக்குத் தற்போது தான் கிடைத்ததாகவும் இதன் மூலம் காடு வளர்ப்புத் திட்டத்தில் முன்னைய கின்னஸ் சாதனையைத் தாம் முறியடித்திருப்பதாகவும் அதிபர் கொர்ரேயா மகிழ்ச்சியுடன் தனது வாராந்த அறிவிப்பின் போது தெரிவித்துள்ளார்.
உயர் அந்தீஸ் மலைச் சிகரங்களையும் தாழ்ந்த அமேசன் வனப்பகுதியை கொண்டுள்ள எக்குவடோரின் அனைத்துப் பாகங்களிலும் இந்த மரநடுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து சுற்றுச் சூழல் அமைச்சர் லொரேனா டாப்பியா தனது டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில் 44,883 பொதுமக்கள் ஒன்று கூடி இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் தகவலின்படி இதற்கு முன்னர் இந்தளவு எண்ணிக்கையில் நூற்றைம்பதிற்கும் அதிகமான வகைகளில் காடு வளர்ப்புத் திட்டம் எதுவும் செயற்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்குவடோரின் 150 பகுதிகளில் இந்தச் சாதனையில் ஈடுபட்ட தொண்டு ஊழியர்கள் பலர் கருத்துத் தெரிவிக்கையில் தாங்கள் இதன் மூலம் மிகவும் பெருமை அடைவதாகவும் இந்தச் சாதனை மறுபடி உடைக்கப்பட்டால் இன்னமும் சந்தோசப்படுவோம் எனவும் கூறியுள்ளனர்.
உலகில் ஒரு மணி நேரத்தில் மிக அதிகளவு விதைகளை நட்ட கின்னஸ் சாதனை தற்போது பிலிப்பைன்ஸ் வசம் உள்ளது. கடந்த செப்டம்பரில் பிலிப்பைன்ஸில் நாடளாவிய ரீதியில் தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு மணி நேரத்திற்குள் 3.2 மில்லியன் விதைகள் நடப்பட்டிருந்ததே இச்சாதனையாகும்.
உலகளாவிய ரீதியில் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் அதிகளவு மரங்களை நடுவதனால் நமது காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைட்டின் அளவு குறைந்து ஆக்ஸிஜனின் வீதம் அதிகரிப்பதுடன் இதனால் பூகோள வெப்பமயமாதலும் குறையும் எனவும் விஞ்ஞானிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.