August 23, 2016 தண்டோரா குழு
சிங்கப்பூரின் முன்னாள் அதிபராக இரண்டு முறை பதவி வகித்தவரும் தமிழருமான எஸ்.ஆர்.நாதன்(92) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
சிங்கப்பூர் நாட்டின் அதிபராக இரண்டு முறை பதவி வகித்தவர் 92 வயதான நாதன். தமிழரான இவரது இயற்பெயர் செல்லப்பன். இவருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன் அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.
அதையடுத்து,அவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.
1924ம் ஆண்டில் பிறந்த அவர் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய மொழி பெயர்ப்பாளராக செயல்பட்டார். பிறகு சிங்கப்பூர் நாட்டில் சிவில் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். மேலும், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அவர் சிங்கப்பூர் அரசில் பல உயரிய பதவிகளை வகித்தார்.
கடந்த 1988ம் ஆண்டு மலேசியாவுக்கான உயர் ஆணையராகவும், 1996ல் சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராகவும் பணியாற்றினார்.அதன் பிறகு, 1999ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை சிங்கப்பூரின் அதிபராக இரு முறை பதவி வகித்தார்.
மேலும்,சிங்கப்பூர் அதிபராக நீண்டகாலம் பதவியில் இருந்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.மூன்றாவது முறையாக அதிபராகப் பதவி வகிக்க வாய்ப்புகள் வந்த போதும் அதனை ஏற்க நாதன் மறுத்துவிட்டார். அவருக்குப் பிறகு, டோனி டான் கெங் யாம் அதிபராகப் பதவியேற்றார்.
தன்னுடைய அரசியல் வாழ்வில் இருந்து விலகிப் பல கல்வி நியமனங்களைப் பெற்றார்.மேலும் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவ ஒரு கல்வி நிதியை உண்டாக்கினார்.ஒரு குழந்தைகள் புத்தகமும், இரண்டு வரலாற்றுக் குறிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், நாதன் இரக்கமுள்ள மற்றும் எளிதில் அணுகக்கூடிய தலைவராக இருந்தார்.அவர் உலக விவகாரங்களில் கொண்ட அதிக அறிவினால் மக்கள் அவரிடம் ஒரு தனி மரியாதையும் ஈர்ப்பும் கொண்டிருந்தனர்.அவர் சிங்கப்பூர் நாட்டின் ஒரு உண்மையான மகன் என்று அந்நாட்டின் பிரதமர் லீ தெரிவித்தார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருதைக் கடந்த 2012ம் ஆண்டு எஸ்.ஆர். நாதனுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.