August 6, 2016 தண்டோரா குழு
பிரான்ஸ் நாட்டின் தெருக்களில் ஆறாக ஓடிய திராட்சை மதுவால் அங்கு உள்ள மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்பட்டது.பிரான்சின் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான சிடி. இங்குள்ள மெரிசெல் அவின்யூ பகுதியில் திடீரென்று நறுமணம் வீசும் தண்ணீர் அங்குள்ள பல தெருக்களிலும் பரவியது.தெருக்களில் எல்லாம் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரின் வாசம் திராட்சை மதுவைப் போல இருப்பதை அறிந்த மக்கள் பின்னர் அதை உறுதியும் செய்தனர்.
இந்தத் திராட்சை மது பல பகுதிகளில் அமைந்துள்ள வாகன நிறுத்தம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நிரம்பியதை அடுத்து அந்தப் பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த அவர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்து தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய திராட்சை மதுவைக் குழாய் வைத்து அப்புறப்படுத்த முற்பட்டனர்.
பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போராடி அதை அப்புறப்படுத்தினர்.
இதனிடையே சம்பவஇடத்திற்கு வந்த காவல்துறை இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பிரோன் எஸ்.ஏ என்பவருக்குச் சொந்தமான திராட்சை மது ஆலையில் இருந்து இந்த மது பெருக்கெடுத்துள்ளதாக தெரியவந்தது.அந்த ஆலையில் வைக்கப்பட்டிருந்த 5 பெரிய தொட்டிகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த மதுவை மர்ம நபர்கள் சிலர் திறந்து விட்டுள்ளனர் என்பதை விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.பெருக்கெடுத்து ஓடிய திராட்சை மதுவின் அளவு சுமார் 50,000 லிட்டர் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த விபத்தைக் குறித்து காவல் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.
இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள், இது திட்டமிட்ட சதி எனவும், ஆலையின் காப்பாளர் இச்சம்பவத்தை நேரில் பார்த்துள்ளதாகவும், கறுப்பு உடை அணிந்த 20க்கு அதிகமானோர் இந்தச் சதி வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.இதனிடையே இச்சம்பவத்தில் அதிரடி திருப்பமாக, பிரான்சின் திராட்சை மது உற்பத்தியாளர்கள் அமைப்பின் நிழல் குழு இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.