June 24, 2016 தண்டோரா குழு
நட்பிற்கு இலக்கணம் இடுக்கண் களைவது. ஆனால் இம்மாணவிகளின் நட்பு அதை விடப்பெரியது. தனக்குக் கிடைத்த மருத்துவப் படிப்பு அனுமதிச் சேர்க்கையைத் தனது தோழிக்கு விட்டுக் கொடுத்தது சுயநலமில்லாத நட்பின் வெளிப்பாடு.
வர்ஷினி.எஸ், ஜனனி என்ற இருவரும் SRV மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்ரி ஸ்கூல் சமயபுரம் திருச்சியில் படித்த மாணவிகள். இருவரும் ஆரம்பப் பள்ளியில் இருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். சிறந்த நண்பர்கள்.
வர்ஷினி மற்றும் ஜனனியின் மதிப்பெண்களின் வித்தியாசம் 0.25 மட்டுமே. இருவரும் முன்னாள் படைவீரர்களின் ஒதுக்கீட்டின் கீழ் அடுத்தடுத்து நேர் காணலுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். வர்ஷினி பிற்படுத்தப்பட்டோர் வரிசையிலும், ஜனனி பிற வரிசையிலும் விண்ணப்பித்திருந்தனர். மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல் ஒருமித்துப் படிக்கவே இருவரும் விரும்பினர்.
ஓமந்தூரார் எஸ்டேட் அரசு மருத்துவமனையில் நடந்த கவுன்சிலிங்கில் வர்ஷினிக்கு மருத்துவ சீட் சிறப்புவகை ஒதுக்கீட்டின் கீழ் கிடைத்தது. ஜனனி பிற வகுப்பைச் சார்ந்தவராதலால் சேர அனுமதி கிட்டவில்லை.
தனக்கு எப்படியும் பொது முறை கவுன்சில் படி சீட் கிடைத்துவிடும், ஆனால் தனது தோழியின் சமூகப்பிரிவிற்கு MMCல் கிடைப்பது கடினம் என்ற காரணத்தால் தன்னுடைய சீட்டைத் தன் தோழிக்கு விட்டுக்கொடுத்து உள்ளார்.
உரியச் சமயத்தில் உதவி செய்த வர்ஷினியின் செயலால் தன்னுடைய கனவான மருத்துவப்படிப்பு நிறைவேறப்போவதாக நன்றியுடன் ஜனனி கூறியுள்ளார்.
மதிப்பெண்கள் பெறுவதில் ஆக்கப்பூர்வமான போட்டியைப் பள்ளி எப்போதும் ஊக்கப்படுத்தும். அதுமட்டுமின்றி சமூகத்திற்குத் தேவையான பொறுமை, நல்லிணக்கம், தியாகம் நல்லொழுக்கம் போன்றவற்றை மாணவர்களுக்குக் கற்பிப்பதிலும் பள்ளி கவனம் செலுத்துகிறது என்று SRV பள்ளி தலைமை ஆசிரியர் கே.துளசீதரன் கூறியுள்ளார்.
மாணவர்களிடையே கல்லூரி மாற்றம் கேட்டு விண்ணப்பங்கள் வருவது நடைமுறையில் சகஜமே என்று மெடிகல் எஜுகேஷன் செலக்ஷன் செகரட்டரி தெரிவித்தார்.