July 28, 2016 தண்டோரா குழு
தூக்கம் கண்களைத் தழுவினால் அமைதி நெஞ்சில் நிலவும் என்பது கண்கூடு. அளவான தூக்கம் வரமென்றால், அளவுக்கதிகம் சாபம் ஆகும். அதை நோயெனக் கணித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியம். புராண காலத்திலும் அத்தகைய மனிதர்கள் உண்டு. அதற்கு உதாரணம் ராவணனின் சகோதரன் கும்பகர்ணன்.
அமெரிக்காவின் பென்ஸ்ய்ல்வனியாவின் நார்த் ஃபயெட்டெ குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான நிகொலெ. இவரது பிரச்சனையே அதிக தூக்கம் தான். இதை க்லெய்னெ லெவின் ஸ்ய்ன்றோம் (KLS) என்று மருத்துவர்கள் கூறுவர். இவர் தொடர்ச்சியாக 64 நாட்கள் உறங்கிக் கொண்டேயிருந்தது நோயின் ஆழமான தாக்கம் என்று சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவர் 6 வயது முதலே இந்த நோயால் அவதிப் பட்டு வருகிறார். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் தூங்குவார். தூக்கத்தில் இருந்து எழும் போது பெரும் பாலும் தன் பெற்றோரையும் உறவினரையும் அடையாளம் காண இயலாதவராயிருப்பார்.
அதிக நேரத்தூக்கத்திற்குக் காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்று முதலில் அவரது தாயார் எண்ணியிருந்ததாகவும், பிறகு 25 மாத தொடர் சிகிச்சியின் முடிவில் தன் மகள் விசித்திரமான நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டதாகவும் கூறினார்.
நிகொலெ தூக்கவயப்படு முன் மிகுந்த சோம்பலும், தலைவலியும் இவரை ஆட்கொள்ளும். 22 நாள் முதல் 64 நாட்கள் வரை தொடந்து தூங்கும் இவர் எழுந்த பிறகு கால நேரக் கணக்கீடு எதுவும் அறியாமல் மிகுந்த துன்பத்திற்கு ஆளாவர் என்று இவரது தாயார் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் போன்ற விழாக்கள், உற்றாரின் பிறந்த நாட்கள், இறந்த நாட்கள் ஆகிய எவற்றிலும் இவர் பங்கெடுத்ததில்லை என்றும், உணவு உண்ண மட்டுமே எழுவார் என்றும் கூறினார்.
எப்போதும் செருகிய தூக்கக்கண்களோடு நடக்கும் இவரை 24 மணிநேரமும் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்கவேண்டும். நீரிழப்பு ஏற்படாவண்ணம் அடிக்கடி நீர் அருந்தச் செய்ய வேண்டும் என்றும் அவரது தாயார் கூறினார்.
அடுத்த முறை தூங்கியெழும்போது அவருக்கு உதவத் தான் உயிருடன் இருப்போமா என்ற அச்சமே இப்போது மேலோங்கியுள்ளது என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
உலகத்திலேயே 1,000 பேரைப் பாதித்துள்ள இந்நோயிற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை என்றும், KLS அல்லது ஸ்லீபிங்க் பியூட்டி சின்றோம் என்ற இந்த நோய் நரம்பியல் கோளாறாகும் என மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.