June 17, 2016 தண்டோரா குழு
தான் வசிக்கும் போபால் ஹரேரா மலைப்பகுதியில் உள்ள ஏழைக் குழந்தைகளும் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட 9 வயது சிறுமி சிறுவர் நூலகத்தை நடத்தி அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.
போபால் ஹரேரா மலைப்பகுதியில் வசித்து வரும் சிறுமி முஸ்கான் ஹகீர்வார், அப்பகுதி பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தினமும் பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்து புத்தகம் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டு வந்துள்ளார்.
இவளுடைய தந்தை தச்சு வேலை செய்பவர் மற்றும் அவளுடைய தாயார் வீட்டைக் கவனித்து கொள்பவர். அப்போது தனது வீட்டின் அருகே உள்ள ஏழைக் குழந்தைகளும் புத்தகம் படிக்க வேண்டும் என்னும் நல்லெண்ணத்தில் அவர்களும் தனது சிறுவர் கதை புத்தகம், காமிக் புத்தகம் ஆகியவற்றை அளித்து வந்துள்ளாள். தாங்கள் படிக்கும் புத்தகங்களில் இருந்து பல சுவையான தகவல்கள் மற்றும் கதைகளை அறிந்துகொள்ள முடிகிறது.
நாங்கள் அங்கே படிக்க மட்டும் வருவதில்லை ஆனால் அங்கே விளையாடவும் வருகிறோம். நாங்கள் படிக்கும் புத்தகங்களில் இருந்து விடுதலை வீரர்கள், அரசர்கள் மற்றும் பல புதியவற்றையும் அறிந்துகொள்கிறோம் என்று ஒரு சிறுமி தெரிவித்தாள்.
முஸ்கானின் செயலைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அப்பகுதி மக்கள் அவளை மனமார பாராட்டினர். மேலும் ராஜ்ய சிக்ஷா கேந்திரா என்னும் மாநில கல்வி மையத்தின் சார்பில் குழந்தைகள் நூலகத்திற்குத் தேவையான புத்தகங்களை வழங்கப் பரிந்துரைத்துள்ளனர். இவ்வாறு பெறப்பட்ட புத்தகங்களைக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி முதல் பாலபுத்தக சாலை என்ற பெயரில் குழந்தைகள் நூலகத்தைச் சிறுமி முஸ்கான் ஹகீர்வார் மகிழ்ச்சியுடன் நடத்தி வருகிறாள்.
மேலும், அங்கு உள்ள சிறுவர், சிறுமிகளுக்குக் கல்வி கற்றுத்தரும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டாள் முஸ்கான். தான் செய்யும் இந்தச் சேவை தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தாங்கள் விரும்பும் புத்தகத்தை அங்கு உள்ள குழந்தைகள் கேட்டு வாங்கிச் செல்கின்றனர்.
அதைப் படித்து முடித்த பிறகு திரும்பத் தந்து விட்டு வேறு புத்தகங்களை எடுத்துச் செல்கின்றனர் என்று கூறினாள். சிலர் தன்னுடன் அமர்ந்து படிக்கின்றனர் அப்படிப் படிக்கும் போது அவர்களுக்குப் புரியாதவற்றை கேட்டுத் தெரிந்துகொள்கின்றனர். ஏழாம் வகுப்பு படிக்கும் தன்னுடைய சகோதரியின் உதவியால் அந்த நூலகத்திற்கான பதிவு புத்தகத்தைப் பயன்படுத்தி வருவதாக முஸ்கான் தெரிவித்தாள்.
இதன் வாயிலாக முஸ்கான், அப்பகுதி மக்களிடமும், குழந்தைகளிடமும், தொடர் பாராட்டுகளை பெற்று வருகிறாள்.