November 29, 2016 தண்டோர்ர் குழு
டிசம்பர் 31-ம் தேதி முதல் இந்தியாவின் பணப் பரிமாற்றம் இல்லாத முதல் மாநிலமாக கோவா மாநிலம் மாற இருக்கிறது என்று கோவா மாநில தலைமைச் செயலாளர் ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.
இது குறித்து ஸ்ரீவத்சவா ஓர் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கோவாவில் 15 லட்சம் பேர் வசிக்கின்றனர். 17 லட்சம் கைபேசி இணைப்புகளும் 22 லட்சம் வங்கிக் கணக்குகளும் இருக்கின்றன. பதிவு பெற்ற வியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் வங்கியிடமிருந்து எம்எம்ஐடி (மொபைல் பண அடையாளங்காட்டி) குறியீடு அளிக்கப்படும்.
இதற்கு மக்கள் ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக *99# என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, அதில் தெரிவிக்கப்படும் சில வழிமுறைகளைப் பின்பற்றினால், சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துக் அளிக்கப்படும். மக்கள் பொருட்கள் வாங்கும்போது இந்த எம்.எம்.ஐ.டி குறியீட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். அதே சமயம் பெரிய கடைகளில் கார்டு தேய்க்கும் இயந்திரமும் நடைமுறையில் இருக்கும்.
இது தொடர்பாக வணிகர்கள், சிறிய கடை வணிகர்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம் மாபூஸா, பனாஜி ஆகிய நகரங்களில் திங்கள்கிழமை தொடங்கும்.
இந்தத் திட்டத்தின் மூலம் காய்கறி, மளிகை பொருட்கள் தொடங்கி ஆப்பிள் ஐ-போன்கள் வரை ரொக்கம் இல்லாமல் மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் வாங்க முடியும் என்று கூறினார்.