June 20, 2016 தண்டோரா குழு
1989ம் ஆண்டு டெல்லி சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு, பண்டகசாலையில் வைக்கப்பட்ட தங்கம், ஆய்வு செய்கையில் பித்தளையாக உருமாறியிருப்பதை கண்டு பிடித்த அதிகாரிகள் டெல்லி காவல்துறையிடம் முதல் விவர அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.
27 வருடங்களுக்கு முன்பு டெல்லி விமான நிலயத்தின் சுங்க அதிகாரிகளால் காதர் இப்ரஹீம் ஹனீஃபா என்பவரிடமிருந்து 1.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 975 கிராம் கொண்ட தங்கத்தடி வெள்ளை உலோக முலாம் பூசப்பட்டது. 2 தங்கச் சங்கிலிகள் 220 கிராம் எடை கொண்டது. 4 வளையல்கள் 78 கிராம் எடை கொண்டது.
இவை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டு அமுல் ஸ்பிரே பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. இவற்றைப் புகைப்படம் எடுப்பது போன்ற தேவையான நடைமுறை விதிகளைப் பூர்த்தி செய்த பின்பு அதிகாரிகள் பண்டகசாலையில் வைத்துப் பூட்டியுள்ளனர். பண்டக சாலைக்குச் செல்ல அலுவலக ஊழியர்களைத் தவிர வேறு நபர்களுக்கு அனுமதியில்லை.
தற்போது ஆய்வு செய்ததில் சங்கிலிகள், வளையல்களுக்குப் பதில் மலிவான சதுரமான உலோகத் துண்டுகளைக் கண்ட அதிகாரிகள் காவல் துறையை அணுகி வழக்குக் கொடுத்துள்ளனர்.
பண்டக சாலைப் பொறுப்பிற்கு கடந்த 27 வருடங்களாகப் பல ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் இறந்தும் விட்டனர். இந்த மோசடி உள்ளிருக்கும் ஊழியர்களால் தான் நடத்தப்பட்டிருக்க வேண்டும், ஏனெனில் மற்ற மூன்றாவது நபர் பிரவேசிக்க அனுமதியில்லை.
300 முதல் 400 கோடி மதிப்புள்ள பொருட்கள் வைத்துள்ள பண்டகசாலையில் இப்பொழுது வெளிப்பட்டிருக்கும் இம்மோசடியைத் தொடந்து பல குற்றங்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனைத் தங்கம் களவு போயிருக்கிறது?
எத்தனை மாற்றப்பட்டிருக்கிறது? என்பது நேர்மையான விசாரணைக்குப் பின்தான் தெரிய வரும் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
சுங்க மையம் இதுவரையில் பண்டசாலையின் பொறுப்பிலிருந்தோரின் பட்டியலை வெளியிடவில்லை என்றும், இந்த வழக்கின் மேல் 27 வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அதீதமான கால தாமதத்தின் காரணத்தையும் அலச வேண்டியுள்ளது என்றும் விமான நிலையத்தின் உதவி ஆணையர் டி.கே.குப்தா தெரிவித்துள்ளார்.
இது நடைமுறையில் ஏற்பட்ட தாமதம் தான், ஆனால் 27 வருடம் என்பது மிகப்பெரிய காலம்தான் என்று சுங்கத் துறை ஆணையரான சஞ்சய் மங்கால் கருத்து கூறியுள்ளார்.