December 18, 2017 தண்டோரா குழு
வளர்ச்சியை பற்றிய விமர்சனங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத் மற்றும் ஹிமாச்சல் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பிரதமர்மோடிக்கு பொன்னாடை அணிவித்து அமித்ஷா வரவேற்றார்.அவருக்கு தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து பாஜக அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் வெற்றி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
பாஜகவுக்கு வாக்களித்த குஜராத் மற்றும் ஹிமாச்சல் மக்களுக்கு நன்றி.பாஜகவுக்கு வாக்களித்ததன் மூலம் மக்கள் வளர்ச்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். குஜராத், ஹிமாச்சல் வெற்றியின் மூலம் அரசுக்கு எதிரான பொய் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
சீர்திருத்தத்திற்கு இந்தியா தயாராகிவிட்டது என்பதை, தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. முன்பு இந்திய மக்களுக்கு நம்பிக்கை, எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தது.தற்போது அந்த நிலை மாறி புதிய கனவுகள், நம்பிக்கை பிறந்துள்ளது.
தற்போதைய சூழலில் ஒரு அரசு மீண்டும் வெற்றிபெற்றால் அது மிகப்பெரிய சாதனை. 1997-98 முதல் இன்றுவரை குஜராத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது வரலாற்று சாதனை. குஜராத் வெற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
குஜராத்தை விட்டு 3 ஆண்டுகளுக்கு முன் வந்த பிறகும் கட்சி மற்றும் ஆட்சி தக்க வைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி, வீழ்ச்சி பற்றி வாதம், பிரதிவாதங்கள் இருக்கலாம்.ஆனால், வளர்ச்சியை பற்றிய விமர்சனங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
வளர்ச்சி அடிப்படையில் வெற்றி என்பதை மற்ற நண்பர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். 2014 மே மாத தேர்தலுக்கு பிறகு, இந்திய மக்களிடையே வளர்ச்சியை பற்றிய பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
வளர்ச்சிக்கான வழிகளை துணிச்சலாக எடுக்கும் அரசு மத்தியில் உள்ளது. பிரதமர் மோடி 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குஜராத்தில் ஜாதியவாதத்தை இணைக்கும் முயற்சி வேதனையளிக்கிறது.நாட்டின் வளர்ச்சிக்காக மாநிலங்களின் வளர்ச்சி அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.