September 27, 2016 தண்டோரா குழு
இந்திய வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தாங்கள் அனுப்பிய செயற்கை கருக்களை தங்களிடம் திருப்பி தருமாறு அமெரிக்க தம்பதியினர் கேட்டுள்ளனர்.
பல வெளிநாட்டு தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்று அறிந்தவுடன், இந்திய வாடகை தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்று வந்தனர். ஆனால், தற்போது வாடகை தாய் முலம் வெளிநாட்டினர் குழந்தை பெற்றுக்கொள்ள மத்திய அரசு தடைசெய்துள்ளது. இதனால் வெளிநாட்டினர் பலர் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவிற்கு அனுப்பிய தங்களது செயற்கை கருக்களை அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினர் திரும்ப கேட்டு மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதுக்குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி இந்திய வாடகை தாய் மூலம் குழந்தை
பெற்றுக்கொள்வதற்காக செயற்கை முறையில் உருவாக்கிய தங்களது கருக்களை இந்தியாவிற்கு கூரியர் மூலம் அனுப்பி வைத்ததாகவும், அதை மும்பை பவாய் மருத்துவமனையில் உள்ள ஒரு ஆய்வுக்கூடத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கருக்களை தங்களிடமே திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்றும் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சாந்தனு காம்கர், கர்னிக் ஆகியோர் அடங்கிய குழு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘வெளிநாட்டு தம்பதிகள் இந்திய வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அது போன்ற உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தம்பதி எந்த அடிப்படையில் இந்த மனுவை தாக்கல் செய்தனர்’ என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறிய போது, ‘இந்திய அரசியலமைப்பு சட்டம் 21வது விதியின் கீழ், வெளிநாட்டுக்காரர்களாக இருந்தாலும், இது போன்ற உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மனு தாக்கல் செய்துள்ள அமெரிக்க தம்பதிக்கு பல வருடங்களாக குழந்தை இல்லை. பலமுறை முயற்சி செய்தும் அவர்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இதையடுத்து அந்நாட்டு மருத்துவர்கள் அந்த தம்பதியிடம் நீங்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். அதை அறிந்த அத்தம்பதியினர் அமெரிக்க மருத்துவர்கள் உதவியுடன் அவர்களுடைய விந்து மற்றும் கருமுட்டையை சேகரித்து செயற்கை முறையில் கருக்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவில் வாடகை தாய் கிடைத்ததால் அந்த தம்பதியர் தங்களது 8 செயற்கை கருக்களை பிரத்யேக கூரியர் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கு 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
இந்நிலையில் அதே ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசு வெளிநாட்டவர்களுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுத்தரும் முறையை தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் செயற்கை கருவை ஏற்றுமதி செய்யவும், இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
எனவே, இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அந்த தம்பதியரின் கனவு தகர்ந்து போனது. அவர்களின் செயற்கை கருக்கள் தற்போது பவாயில் உள்ள ஒரு மருத்துவமனையின் ஆய்வுக்கூடத்தில் உறை நிலையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த செயற்கை கருக்களை திரும்ப தங்களிடமே ஒப்படைக்குமாறு அந்த தம்பதியர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஏற்றுமதி, இறக்குமதிக்கு உள்ள தடையை காரணம் காட்டி அவர்களது செயற்கை கருக்களை திரும்ப ஒப்படைக்க மறுக்கிறார்கள்.
தாங்கள் அனுப்பிய செயற்கை கருக்களை தம்பதி திரும்ப கேட்பது அது ஏற்றுமதி, இறக்குமதி விதிகளுக்குள் வராது. இவ்வாறு விதிமுறைகளை காரணம் காட்டி செயற்கை கருக்களை திரும்ப ஒப்படைக்காமல் இருப்பது சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரானது. எனவே, அவற்றை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தம்பதிக்கு செயற்கை கருக்களை திரும்ப ஒப்படைப்பது குறித்து தங்களின் நிலைப்பாட்டை வரும் அக்டோபர் 4ம் தேதி தெரிவிக்குமாறு மத்திய அரசின் வர்த்தக அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றிற்கு உத்தரவிட்டனர். மேலும் இவ்விசாரணையை அன்றைய தேதிக்கே ஒத்தி வைத்துள்ளனர்.