August 16, 2016 தண்டோரா குழு
தெலுங்கான மாநிலத்தில் சுதந்திர தின ஏற்பாடு நிகழ்ச்சியில் கொடி கம்பம் நட்ட போது அருகில் இருந்த மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து தலைமையாசிரியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ரங்காரெட்டி மாவட்டம் மேடிகொண்டா என்ற கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இப்பள்ளியில் பிரபாவதி தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுதந்திர தினம் கொண்டாடுவதற்காக தேசியக் கொடி ஏற்ற கம்பம் நடப்பட்டது. இதனைப் பள்ளி மாணவிகள் 4பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது யாரும் எதிர் பாராதவிதமாக கொடிக் கம்பம் அருகில் இருந்த மின் கம்பியில் சிக்கியது. அதனை எடுப்பதற்கான முயற்சி ஈடுபட்ட போது மின் கம்பி அறுந்து அருகில் நின்றுகொண்டிருந்த மாணவிகள் மீது விழும் வகையில் வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரபாவதி ஓடிவந்து மாணவிகளைத் தள்ளிவிட்டுள்ளார்.அதனால் மாணவிகள் தப்பினர். ஆனால் அந்த மின்கம்பி அவர் மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்குதலில் இருந்து மாணவிகளைக் காப்பாற்றி தலைமை ஆசிரியை தனது உயிரைத் தியாகம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குழந்தைகளின் பெற்றோர்கள் தலைமையாசிரியருக்குக் கண்ணீரால் அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.