October 28, 2016 தண்டோரா குழு
ஹரியானா மாநிலத்தில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (ஹெச்எம்டி) நிறுவனத்தின் டிராக்டர் தயாரிப்பு ஆலை நஷ்டத்தில் இருப்பதால் அதை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான அந்த ஆலையின் ஊழியர்களின் ஊதியம், இதர நிலுவைத் தொகைகளை வழங்குவதற்காக, சுமார் 718.72 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இதை குறித்து, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் தொழில் துறையை மேம்படுத்தும் வகையில், இயந்திரங்களைத் தயாரிப்பதற்காக, ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (ஹெச்எம்டி) ஆலை, பெங்களூரில் கடந்த 1953ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டின் உற்பத்தி, பொறியியல் துறைகளில் வளர்ச்சிக்கு இந்த ஆலை ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.
பிறகு, ஹரியாணா மாநிலம், பிஞ்சூரில் கடந்த 1971-ம் ஆண்டு ஹெச்எம்டி ஆலையின் டிராக்டர் உற்பத்தி பிரிவும் தொடங்கப்பட்டது. மேலும் அதிகரித்து வரும் செலவுகள், சர்வதேச நிலையில் கடுமையான போட்டி, மலிவான விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் ஆகிய காரணத்தால்,1990ம் ஆண்டுகளில் நிறுவனத்தின் செயல்திறன் குறையத் தொடங்கியது. அந்நிறுவனத்தை தோல்வியில் இருந்து மீண்டும் மேலே கொண்டுவர வேண்டும் என்று பல முயற்சி எடுத்தும் வெற்றியை காண முடியவில்லை.
மேலும், வருவாயை அதிகமாக ஈட்ட முடியாத நிலையில், டிராக்டர் உற்பத்தி வர்த்தகத்தை தொடர்வது சரியாக இருக்காது எனக் கருதி, அந்த ஆலையை மூடவும், ஹெச்எம்டி ஆலையின் இதர பிரிவுகளில் கவனம் செலுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பிஞ்சூர் டிராக்டர் தயாரிப்பு ஆலையின் ஊழியர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவும் இல்லை, கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அவர்களுக்கு அளிக்க வேண்டிய இதர சலுகைகள் வழங்கப்படவும் இல்லை.
எனவே, அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம், இதர நிலுவைத் தொகை வழங்குவதற்காக, சுமார் 718.72 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.