August 2, 2016 தண்டோரா குழு
பொருட்களைப் பெருக்க பட்டத்தைப் பொருளாகப் பாவித்து விற்பனை செய்யும் இக்காலகட்டத்தில், சொந்தப் பொருட்களை விற்று பட்டங்கள் இளைஞர்களைச் சேரவேண்டுமென்று பாடுபடும் ஒரு வித்தியாசமான மனிதர் டுபெய்.
தனது பதவியையும் துறந்து, வீட்டையும் விற்று கிராமப்புற இளைஞர்களுக்குக் கல்வி அறிவை அளிக்க முற்பட்டுள்ளார் 40 வயது இளைஞரான ப்ரஞ்சல் டுபெய்.
இந்தோரில் உள்ள தனது மூதாதையரின் கிராமத்து இளைஞர்களுக்குக் கல்வி வழங்க வெளிநாட்டு நிறுவனத்தில் தான் செய்து கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
இஞ்சினியரான டுபெய் ஜெர்மன் சர்வதேச கணினி நிறுவனத்தில் SAP SE பணியிலிருந்து ராஜினாமா செய்யும் முடிவையும், வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே வீட்டை விற்பது என்ற முடிவையும் எடுக்கத்தான் மிகுந்த சிரமப்பட்டதாகவும், எனினும் வாழ்க்கையில் சில கட்டங்களில் சில முடிவுகள் தவிர்க்கமுடியாதவை என்றும் கூறியுள்ளார்.
டேவாஸ் மாகாணத்தில் உள்ள சண்டல்புர் கிராம இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத் தேவையான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதே இவரது கனவு. தன்னிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்து 2010 முதல் தனது லட்சியத்தை நோக்கிப் பயணம் செய்துள்ளார். அதன் விளைவாகத் தற்பொழுது 100 க்கும் மேற்பட்ட இவரது கல்லூரி மாணவர்கள் தொழில் நுட்பத்தில் பெயர் பெற்ற SAP, காக்னிசென்ட்,போன்ற நிறுவனிங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இந்த லட்சியக் கனவை முன்நோக்கிச் செலுத்த கஷ்ட, நஷ்டங்களைக் கணக்கிட இரண்டு வருட காலம் தேவைப்பட்டது.
SSISM என அழைக்கப்படும் சண்டல்புர்ல் உள்ள சன்ட் சிங்கஜி இன்ஸ்டிடுட் இவரது கனவைத் தூண்டிய மையமாகும்.
தனது வளர்ப்பு முறையும், கிராமத்து இளைஞர்களின் சூழலும் வேறு, வேறு ஆனபடியால் அவ்விளைஞர்களை வெளிக்கொணர்ந்து புரிய வைக்க பெரும் முயற்சி தேவைப்பட்டது என்று டுபெய் கூறினார்.
கிராமத்து இளைஞர்களை பெங்களுர் போன்ற தொழில் நுட்பத்தில் முன்னேறிய இடங்களுக்கு அழைத்துச் செல்வதனால் அவர்களது எண்ணங்களும், கனவுகளும், பெரிய அளவில் மேம்படும் என்ற காரணத்தினால் இன்ஃவோஸிஸ், பையோகான், SAP போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களது லட்சியங்களை உருவாக்க உதவி செய்வது இவரது குறிக்கோள்.
இன்றைய நிலையிலும் மாணவிகளை இவ்வளையத்திற்குள் கொண்டுவருவது மிகவும் கடினம். பெற்றோர்கள் தங்கள் மகள்களைக் கற்க அனுப்பவதற்கு பெரிதும் தயங்குவதே இதற்கு மூலகாரணம். பெண்கள் பாதுகாப்பை முன்னிட்டும், பிற்காலத்தில் பெண்கள் கல்வியால் எந்த அனுகூலமும் இருக்கப்போவதில்லை என்ற எண்ணமுமே இதற்கு அடிப்படை.
பல வருடக் கடின முயற்சிக்குப் பின் பல மாணவ, மாணவியர்கள் கல்வி நிலையிலும், வாழ்க்கைத் தரத்திலும் உயர்ந்து நிற்பதைக் காணும் போது, தனது லட்சியம் பூர்த்தியடைந்து விட்டதாக உணர்வதாகவும், அத்தகைய இளைஞர்கள் ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்திற்கு முன்னோடியாகத் திகழ்வர். அதுவே சமுதாய முன்னேற்றம் என்றும் தெரிவித்தார்.
எனினும் இளைய சமுதாயத்தினரிடையே பட்டப்படிப்பின் மேலுள்ள மோகம் குறையாத காரணத்தினால், பட்டங்களை விற்கும் கல்லூரிகளுடன் மோதும் சூழ்நிலை உருவாகிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைப் போல பல பட்டதாரிகள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள இயலாத நிலையில்தான் உள்ளனர்.
200 கிராமத்தைச் சேர்ந்த 1,000 இளைஞர்களைக் கொண்ட இவரது கல்லூரி நடைமுறைப் பயிற்சிகளையும், பலவிதமான வெளிப்பாடுகளையும் போதிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இவரது இந்த லட்சியப் பாதையில் நடக்க இவரது தாயார் கல்பனா டுபெய்ம், 37 வயதான இவரது மனைவி அமிடா டுபெய்ம் பல தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது என்று தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக பெங்களூரில் அவர்கள் வாழ்ந்து வந்த வசதியான வாழ்க்கையைத் துறந்து மிக எளிமையான வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்திக் கொள்வதென்பது மிகவும் கடினமானது என்றனர்.
தனது கணவனின் சந்தோஷமே பிரதானம் என்றமையால் குடும்பத்தில் உள்ளவர்கள் டுபெய்ன் கனவுகளுக்கு உருக்கொடுத்தனர் என்று அமிடா கூறினார்.