September 22, 2016 தண்டோரா குழு
இந்தியா மீது திடீரென்று ஜோம்பிகளோ அல்லது வேற்று கிரக வாசிகளோ தாக்குதல் நடத்தினால் இந்திய அரசாங்கம் எப்படி சமாளிக்கும்? என்று மும்பையை சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் கேட்ட கேள்வியால் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act 2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங் களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும்.
இச்சட்டத்தின் மூலம் அரசாங்கம் சார்ந்த அல்லது அரசு உதவிப் பெறும் நிறுவனங்கள், துறைகள், அலுவலகங்கள் அனைத்தும் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாமாகவே முன்வந்து மக்களுக்கு கொடுக்க வேண்டும். குறிப்பாக தகவல்களை பெறும் நோக்கோடு மக்கள் தங்களிடம் கேட்கும்பொழுது தகவல்களை அளிக்க வேண்டியது அரசு, நிறுவன அலுவலர்களின் கடமையாமாகும்.
அந்த வகையில் மும்பையை சேர்ந்த அஜய்குமார் என்பவர் கடந்த மார்ச் மாதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி மத்திய அரசிடம் தகவல் ஒன்றை கேட்டுள்ளார்.
அவருக்கான தகவலை எப்படி தருவது என்பதை தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்த துறைச் சார்ந்த அலுவலர்கள், வேறு வழியில்லாமல் இந்த கேள்வியை மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்படி என்ன கேள்விகள் கேட்டார் அந்த நபர்?
1. திடீர் என்று ஜோம்பிகளோ வேற்று கிரக வாசிகளோ இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் அரசாங்கம் எப்படி சமாளிக்கும்?
2. ஜோம்பிகளின் தாக்குதல்களை முறியடித்து இந்திய மக்களை காப்பாற்ற முடியும்-னு அரசாங்கம் நம்புகிறதா?
3. ஆம் என்று சொன்னால் அதை எப்படி செய்வீர்கள்?
4. ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் உதவி இல்லாமல் ஜோம்பிகளை நம் ராணுவத்தால் ஒழிக்க முடியுமா? போன்ற கேள்விகளை அவர் கேட்டிருந்தார்.
பின்னர் இது குறித்து மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தனது டுவிட்டர் பக்கத்தில்,”இந்த கேள்விகள் மிகவும் அறிவியல் சார்ந்துள்ளது எனவும் இதற்கு பதில் அளிக்க அதிகாரிகளுக்கு நீண்ட நேரம் தேவைப்படுவதால் அவர்களின் பொன்னான நேரங்களை இது போன்ற கேள்விகளை கேட்டு வீணாக்காதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.