November 28, 2016 தண்டோரா குழு
கணக்கில் காட்டாத பணத்துக்கு 73 சதவீத வரி மற்றும் 10 சதவீதம் அபராதம் விதிக்கும் வைகையிலான சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் அருண் ஜெட்லி திங்கள்கிழமை (நவ. 28) தாக்கல் செய்தார்.
நவம்பர் 8ம் தேதிக்குப் பிறகு வங்கிகளில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டால் வருமானவரித் துறை விசாரணை நடத்தும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் கணக்கில் காட்டாதப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களுக்குக் கூடுதல் வரி மற்றும் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் வகையில் வருமான வரி சட்டத் திருத்த மசோதா திங்களன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்திற்கு இடையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். இதன்படி கணக்கில் காட்டாத பணத்துக்கு 10 சதவீத அபராதம் என்பதுடன் அந்தப் பணத்திற்கு 30 சதவீத வரியும், அந்த வரிக்கு 33 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்படும் என்று வருமான வரி திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
கறுப்புப் பணம் குறித்து தாமாகவே முன் வந்து செலுத்துபவர்கள், செலுத்தும் தொகையில் 25 சதவீதத்தை பிரதமரின் ஏழைகளுக்கான திட்டத்திற்கு வழங்க வேண்டும் என்று இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. நான்கு ஆண்டு காலத்திற்கு இந்தப் பணம் இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும். எந்தவித வட்டியும் வழங்கப்படமாட்டாது என்ற திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதைப் போல், ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு பிறகு, வருமான வரித்துறையினர் கண்டுபிடித்த கணக்கில் வராத வருமானத்திற்கு 75 சதவீதம் வரியும், 10 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும். டெபாசிட் செய்யப்பட்ட கணக்கில் வராத வருமானத்தின் ஒரு பகுதியை 4 ஆண்டுகளுக்கு வெளியே எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.