November 1, 2016 தண்டோரா குழு
அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி.) இந்தியா உறுப்பினராவது தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் திங்கள்கிழமை (அக்டோபர் 31) நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தை, கணிசமான முறையிலும் ஆக்கபூர்வமான முறையிலும் இருந்தது என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
என்.எஸ்.ஜி., குழுமத்தில் உறுப்பினராக சேர இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக புதுதில்லியில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது.
இதையடுத்து, சீன தலைநகர் பெய்ஜிங்கில் திங்கள் கிழமை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி அமன் தீப் சிங் கில் மற்றும் சீனாவின் ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் தலைமை இயக்குநர் வாங் குன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அணுசக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள, என்.எஸ்.ஜி., குழுமத்தில் இணைவதற்கு இந்தியா விண்ணப்பித்திருந்தது.
இதில் உறுப்பினராவதன் மூலம், இந்த அமைப்பில் உள்ள 48 நாடுகளுடன் அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
தென் கொரியாவின் சியோலில், ஜூனில் நடந்த, என்.எஸ்.ஜி., கூட்டத்தில், இந்தியாவின் முயற்சிக்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.