November 8, 2016 தண்டோரா குழு
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க ஐ.நா., கால தாமதம் செய்வதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க வேண்டும் என இந்தியா ஐ.நா.,வை வலியுறுத்தியது. ஆனால், மசூத் அசாருக்கு தடை விதிக்க சீனா முட்டுக்கட்டை போட்டது.
இதற்கு சில விதிமுறைகளை காரணம் கூறியது. இதற்கான காலக்கெடு, செப்டம்பர் மாதத்துடன் முடிந்த நிலையில், இந்தியாவின் முயற்சிக்கு தடை விதிக்கும் வகையில், சீனா மேலும் 3 மாதம் காலக்கெடு கோரியுள்ளது.
இந்நிலையில் ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் சையத் அக்பரூதீன் பேசியதாவது:
பயங்கரவாதத்திற்கு எதிரான நமது முயற்சிகளை பயங்கரவாதிகள் தினசரி சீரழிக்கின்றனர். பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்ட அமைப்பின் தலைவருக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்ய, ஐ.நா., 9 மாதம் கால அவகாசம் வழங்குகிறது.
தற்போதுள்ள சர்வதேச சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு சபையை விரிவாக்கம் செய்ய வேண்டும். மனித நேய உதவிகளை செய்ய தவறியது, பயங்கரவாத பிரச்னை, அமைதி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவில்லை.
இதனால், பல முக்கிய பிரச்னைகளில், சர்வதேச சமூகம் விலை கொடுக்க வேண்டியிருந்தது. சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள சிரியா விவகாரத்தில் தடை விதிக்க வேண்டும். அமைதி நடவடிக்கை எடுக்க வேண்டிய தென் சூடான் பிரச்னையில் நடவடிக்கை இல்லை. இது குறித்து முடிவு செய்யப்பட்டு பல மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.