October 3, 2016 தண்டோரா குழு
கூகுள் நிறுவனம் நடத்திய அறிவியல் கண்காட்சியில் தென்னாப்பிரிக்காவில் வசித்து வரும் கியாரா நிர்கின் என்ற இந்திய பெண் சமர்பித்த செயல் திட்டத்திற்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.
கியாரா நிர்கின் என்னும் 16 வயது இந்திய பெண் தென்னாப்பிரிக்காவில் வசித்து வருகிறார் . 11ம் வகுப்பு மாணவியான கியாரா நிர்கின் தென்னாப்பிரிக்காவில் நிலவி வரும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, ‘தண்ணீர் இல்லாதப் பயிர்கள் இனி இல்லை’ என்ற தலைப்பில் தன்னுடைய செயல் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
அதில் ஆரஞ்சு பழத்தோலை உறிஞ்சு பொருளாகப் பயன்படுத்துவதன் மூலம் நிலத்தில் நீரை தக்க வைத்து, வறட்சிக் காலத்திலும் விளைச்சலைப் பெற முடியும் என்று கண்டுபிடித்திதுள்ளார்.
கூகுள் நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகம் எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்க்க வழி என்னும் தலைப்பில் 13 முதல் 18 வயது வரையிலான இளம் விஞ்ஞானிகளுக்கு, அறிவியல் கண்காட்சி நடத்தி விருது வழங்கி வருகிறது. அதில் கியாரா நிர்கின், தன்னுடைய கண்டுபிடிப்புக்காக விருது பெற்றுள்ளார். 50,000 டாலர்கள் உதவித்தொகையையும் பரிசாக அவருக்கு அளிக்கப்பட்டது.
இது குறித்து கியாரா நிர்கின் கூறுகையில்..
விவசாயத்தில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் உறிஞ்சு பொருட்கள் செயற்கை பாலிமர்களால் ஆனவை இது தனது எடையை விட 300 மடங்கு நீரின் எடையை உறிஞ்சித் தக்க வைத்துக்கொள்ளும் தன்மை உடையவை ,இது மட்கும் திறன் அற்றவை விலையும் அதிகம்.
சிட்ரஸ் அமிலம் இருக்கும் பழங்களில் இயற்கையிலேயே பாலிமர்கள் அமைந்துள்ளதைக் கண்டறிந்தேன். மேலும், 45 நாட்கள் தொடர் பரிசோதனையில் இது உறுதியானது. இவற்றால் நிலத்தை எப்போதும் ஈரபதமாக வைத்துகொள்ள முடியும். வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களின் விவசாயிகளுக்கு இந்தக் கண்டுபிடிப்பு பெருமளவில் பயன்படும்’ என்று கூறினார்.