November 22, 2016
தண்டோரா குழு
பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா சென்னையில் உடல்நலக் குறைவால் அவரது இல்லத்தில் காலமானார்.
கர்நாடக சங்கீதம் என்றாலே நம் நினைவிற்கு வரும் புகழ்பெற்ற பிரபல கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணா சென்னை ஆர்.கே. சாலையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) காலமானார். அவருக்கு வயது 86.
1930-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6-ஆம் தேதி ஆந்திர மாநிலம், சங்கரகுப்தமில் பாரம்பரியமிக்க இசைக் குடும்பத்தில் பிறந்தவர் பாலமுரளி கிருஷ்ணன். தனது ஆறு வயதில் இசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட கர்நாடக சாகித்யங்களுக்கு இசை வடிவம் அளித்துள்ளார்.
சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக இரண்டு முறை தேசிய விருது பெற்ற இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதையும் பெற்றுள்ளார். மேலும், பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
பாலமுரளி கிருஷ்ணா வாய்ப்பாட்டுடன் வயலின், வயோலா, கஞ்சீரா, வீணை ஆகிய இசைக் கருவிகளையும் இசைக்க வல்லவர்.
இதுவரை 25,000-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார். சுவிஸ் நாட்டில் நிகழ்கலை மற்றும் ஆய்வு அகாதெமி (Academy of Performing Arts and Research) நிறுவியுள்ளார்.
“திருவிளையாடல்” படத்தில் வரும் ‘ஒரு நாள் போதுமா’ என்ற பாடல் மூலம் மூலை முடுக்கெல்லாம் இவரது புகழ் பரவியது.
டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா மஹதி, சுமுகம், திரிசக்தி, சர்வஸ்ரீ, ஓம்காரி, ஜனசமோதினி, மனோரமா, ரோஹிணி, வல்லபி, லாவங்கி, ப்ரதிமத்யமாவதி, சுஷமா போன்ற ஏராளமான புதிய ராகங்களை உருவாக்கியுள்ளார்.