July 6, 2016 தண்டோரா குழு
திருப்பூர் எப்போதுமே தமிழக மக்கள் மாற்றுமின்றி வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மக்களின் சொர்க பூமியாக திகழ்கிறது. ஊரில் தவறு செய்துவிட்டு ஓடிவருபவர்கள்.
காதலித்து வீட்டை விட்டு வருபவர்கள் எனப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி படித்த படிப்பிற்கு வேலைக் கிடைக்காமல் இருப்பவர்களுக்கும் வேலையை வாரி வழங்கும் இடமாக இருப்பது திருப்பூர் தான். இதனால் திருப்பூர் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.
குறிப்பாக அங்கு இருக்கும் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஆடை ஏற்றுமதி செய்து வருவதால் அங்கிருந்து வரும் வெளிநாட்டவர்கள் திருப்பூரில் அதிகம் காணப்படுவார்கள். ஆனால் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விசா இல்லாமல் இருக்கும் வெளிநாட்டவரும் திருப்பூரிலேயே தங்கியிருந்தனர்.
இதுகுறித்து கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த பின்னர் விசா இன்றி தங்கியிருந்த பலர் அவர்களது நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனாலும் இந்தப் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. வெளிநாடுகளில் இருந்து இங்கு வருபவர்கள் தற்போது பல்வேறு தொழில்களையும் செய்துவருவதைக்
காணமுடிகிறது. குறிப்பாக மளிகைக்கடை முதல் துணி ஷோரூம் வரை வைத்துள்ளனர்.
இது மட்டுமின்றி அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகளவில் இங்குத் தங்கியுள்ளனர். இதுவரை அவர்களால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத நிலையில் தற்போது திருப்பூரில் மளிகைக்கடை வைத்துப் பிழைத்துவந்த வங்கதேசத்தின் பிரஜை ஒருவரையும், மாடு வெட்டும் இடத்தில் வேலை செய்து வந்த அவரது அண்ணனையும் இரு தினங்களுக்கு முன் வங்கதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அது மட்டுமின்றி அவர்கள் இருந்த வீடு, கடை மற்றும் மாடு வெட்டும் இடம் ஆகிய அனைத்தையும் சோதனை செய்துள்ளனர்.
இதில் ஆதாரங்கள் ஏதேனும் கிடைத்ததா எனத் தெரியாத நிலையில் அவர்கள் வந்து சென்றது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. திருப்பூர் மாவட்டம் முற்றிலுமாக மின்னாளுமைக்கு உட்படுத்தப்படாவிட்டால் இனி வரும் காலங்களில் யார் வருகிறார்கள் போகிறார்கள் எனத் தெரியாமல் தீவிரவாதிகள் கூட வந்துபோகும் நிலை உருவாக வாய்ப்புள்ளது என்பது மட்டும் உறுதி.
எனவே மாவட்ட நிர்வாகம் திருப்பூர் மாவட்டத்தில் வாடகைக்கோ அல்லது சொந்தமாக வீடு வைத்துள்ள வெளிநாட்டுப் பிரஜைகளை கண்காணித்து விசா மற்றும் உரிய ஆவணங்கள் உள்ளனவா எனச் சோதனை செய்யவேண்டும் என்பதே தற்போது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் விசா இல்லாத வெளிநாட்டுப் பிரஜைகளை வெளியேற்றியது போல் மீண்டும் ஒரு சோதனை நடத்த வேண்டும் என்பதே தற்போது திருப்பூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.