August 16, 2016 தண்டோரா குழு
மறைந்த பிரதமர் நேரு முதல் இன்றைய பிரதமர் மோடி வரை ஜம்மு அண்ட் காஷ்மீரைத் தேர்தல் நோக்குடன் அணுகியதே இன்றைய நிலைக்குக் காரணம் என்று காஷ்மீரின் முதல்வர் மெஹபூபா முக்தி தெரிவித்துள்ளார்.
சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி காஷ்மீரின் அமைதிக்குப் பங்கம் விளைவிப்பது பாகிஸ்தானே எனக் கூறிய வேளையில், காஷ்மீரின் முதல் மந்திரி எதிர்மறையாகக் கூறியிருப்பது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் காஷ்மீர் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின், பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என்றும், மோதல் என்றும் தீர்வாகாது என்றும் தனது உரையில் கூறியுள்ளார்.தனது மாநில மக்கள் மீது எந்தத் தவறும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
ஜனநாயகத்தின் ஆணிவேரே பேச்சு வார்த்தைதான்.எந்தப் பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது சிறந்தது.பல பிரச்சனைகளையும் இதன் மூலம் தீர்வு கண்ட நமக்கு இந்தப் பிரச்சனையை மட்டும் அவிழ்க்கத் தெரியாதது ஏன் என்று வினா எழுப்பியுள்ளார்.
ஜீலம் ஆறு ரத்த ஆறாக மாறிவிட்டது.இதற்கு மேலும் ரத்தப் பெருக்கை ஆறு தாங்காது, ஆகையால் ஒரே வழி பேச்சுவார்த்தையே என்றார்.பிரபலமான போராளியின் மரணம் காஷ்மீரை ஜூலை 8ம் தேதியிலிருந்து புரட்டிப் போட்டுள்ளது.56 பேர்கள் இறந்துள்ளனர்.பல ஆயிரக்கணக்கானோர் காயமுற்றுள்ளனர்.
மக்கள் அனைவரும் வன்முறையைக் கைவிட்டு சமாதான முறையில் சிக்கலுக்குத் தீர்வு காணவேண்டும் என்றும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்றும், மறைந்த பிரதமர் வாஜ்பாயின் காலத்தில் நிறைவு செய்ய முடியாத செயலைப் பிரதமர் மோடியின் காலத்தில் நிறைவு செய்ய வேண்டும் என ஸ்ரீ நகர் பக்ஷி ஸ்டேடியத்தில் சுதந்திர விழா கொடியேற்றத்தின் போது தெரிவித்துள்ளார்.
இவரது PDP கட்சியும் மத்தியிலுள்ள BJP கட்சியும் கூட்டணி அமைத்துக் காஷ்மீரை நிர்வாகம் செய்கிறது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசுக்கும்,மாநிலத்தில் அமைந்துள்ள கூட்டணிக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடு பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுதந்திர தினத்தன்று மெஹபூபா முக்தி மூவர்ணக் கொடியை ஏற்ற முற்படும் போது கொடிக்கம்பம் கீழே சாய்ந்து, கொடியும் கீழே விழுந்தது அவர்களை மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாக்கியது எனப் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
முதன் மந்திரி கொடிக்கு வணக்கம் தெரிவிக்கும் வகையில் இரு அதிகாரிகள் தேசியக் கொடியை தங்கள் கரங்களில் ஏந்தி நிகழ்ச்சியை நிறைவுறச் செய்தனர் என்றும்,அதன் பின் கம்பம் சரிசெய்யப்பட்டு கொடி பறக்க விடப்பட்டது என்றும் கூறினர்.இந்நிலையில் இந்த விசயத்தில் தவறு செய்த நபர்களை இடை நீக்கம் செய்யுமாறும் முக்தி உத்தரவிட்டார்.