July 22, 2016
தண்டோரா குழு
கடந்த சில நாட்களுக்கு முன் ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், தீவிரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டான்.
இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அரசு மரியாதை செலுத்தி இந்தியாவை வம்புக்கு இழுத்தது. மேலும் துக்கம் அனுசரித்தும், அவனது பலி குறித்து காஸ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் இந்தியாவின் பொறுமையை சோதித்து வருகிறது. இதன் மூலம் அங்குக் கலவரங்களை தூண்டி அதில் நன்மை காணலாம் என பாகிஸ்தான் அரசு நினைக்கிறது.
இதற்கு உடந்தையாக இருந்த சில அமைப்புகள் அங்குக் கலவரத்தில் ஈடுபட்டன. இந்தக் கலவரத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.
இன்றுவரை 14 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை காஷ்மீர் சென்று அங்குள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்யவுள்ளார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.