December 5, 2016 தண்டோரா குழு
ஜெயலலிதாவை இங்கிலாந்து அல்லது மற்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவ உதவி அளிப்பது பற்றி முடிவு செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், செப்டம்பர் 22 ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
இது தொடர்பாக திங்கட்கிழமை கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் ஏற்பட்ட பின்னடைவு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணித்து வருவது சற்று ஆறுதலானது என்றாலும் கூட, இவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட, இங்கிலாந்து அல்லது மற்ற வெளிநாடுகளுக்கு உடனடியாக அழைத்துச்செல்லும் வாய்ப்பு பற்றி, அருகிலிருந்து கவனிப்போர் துணிந்து முடிவு எடுப்பது பற்றி அவசரமாக ஆலோசித்து ஆவன மேற்கொள்ள வேண்டும்.
எம்.ஜி.ஆரை மருத்துவ வசதி பெற்ற தனி விமானம் மூலம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து குணப்படுத்தியது போல, மருத்துவ வசதி குறித்து பரிசீலித்தல் அவசரம் அவசியம்.
முதல்வர் விரைவாக உடல்நலம் தேற நமது விழைவுகள்.
இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.
முதல்வரின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4) மாலையில் மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு இதயவியல், சுவாசவியல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
முதல்வர் உடல்நலம் பெற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்முதல்வர் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்தனர்.
தமிழகத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை பேசி அவர், “சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய எய்ம்ஸ் குழு சென்னை விரைந்துள்ளது. டாக்டர் கில்நானி தலைமையிலான 4 பேர் கொண்ட மருத்துவக் குழு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். ஜெயலலிதா அபாய கட்டத்தைத் தாண்டி விட்டார்” என்று கூறினார்.