January 9, 2018 தண்டோரா குழு
இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு 4,80,200 அமெரிக்க டாலரை கடந்த முயன்றதற்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுதில்லி விமானநிலையத்தில் இருந்து சீனா நாட்டின் ஹாங்காங்கிற்கு திங்கள்கிழமை(ஜன 8) பயணம் செய்ய ஜெட் ஏர்வேஸ் விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் நடந்த அதிரடி சோதனையில், இந்தியாவில் இருந்து சுமார் 4,80,200 அமெரிக்க டொலர்கள் கடத்த முயன்றதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பெண் விமான ஊழியர் ஒருவரை,வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அந்த பெண் ஊழியர், புதுதில்லியின் விவேக் விஹார் பகுதியியை சேர்ந்த அமித் மல்ஹோத்ரா என்ற ஏஜென்டுடன் பணிபுரிந்து வருகிறார்.இவர் அந்நிய செலாவணி கடத்தலுக்காக விமான ஊழியர்களை பயன்படுத்தி வருவதும், புதுதில்லியை சேர்ந்த வணிகர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு, அதை வெளிநாடுகளுக்கு சில விமான ஊழியர்கள் மூலம் கடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த பணத்தின் மூலம், வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை வாங்கி, அதை இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கொண்டு வருகிறார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அமித் மல்ஹோத்ரா மற்றும் ஜெட் ஏர்வேஸ் பெண் ஊழியர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.