January 25, 2018 தண்டோரா குழு
உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவ கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன் காலமானார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை குமரலிங்கத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் சங்கர் (22). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகள் கவுசல்யா (19). என்பவருக்கும் கல்லூரியில் படிக்கும்போது காதல் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனால் இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி இவர்கள் 2 பேரும் உடுமலை பஸ் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் சங்கர்-கவுசல்யாவை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் பரிதாபமாக இறந்தார். காயத்துடன் உயிர் தப்பிய கவுசல்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பினார்.
இந்த வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 8 பேர் குற்றவாளிகள் என கடந்த டிசம்பரில் நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளித்தார். ஆறு பேருக்கு பிரிவு 302ன் கீழ் மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன் மூச்சு திணறல் காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.