August 3, 2016 தண்டோரா குழு
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கமல்ஹாசன் தற்போது 2 அறுவை சிகிச்சைக்கு பிறகு எழுந்து நடப்பதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டு மாடிப்படியில் கமல்ஹாசன் கடந்த 13ஆம் தேதி தவறி விழுந்து அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, 3 வாரத்தில் கமல் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கமலஹாசனுக்கு திடீரென காலில் வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். அதில், முன்னதாக அறுவை சிகிச்சை செய்த இடத்தில் துகள்கள் இருப்பதாகக் கூறி மீண்டும் ஒரு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கமல்ஹாசன்,தான் நலமாக இருப்பதாகத் தனது ரசிகர்களுக்கு டிவிட்டர் மூலம் நற்செய்தி அளித்துள்ளார். அவரது டுவீட்டில், இன்று நானே எழுந்து நடந்தேன். காந்தியடிகளைப் போன்று தோள் தாங்க இருவருடன் தான் என்றாலும் முன்னேற்றம். இன்று வலி சற்று குறைந்துள்ளது என கமல்ஹாசன் டிவிட்டரில் கூறியுள்ளார்.