October 6, 2016 தண்டோரா குழு
பொதுவாக சிறுவர் சிறுமிகள், சோட்டா பீம், கிருஷ்ணா போன்ற கதாநாயகர்கள் கொடூரமான விலங்குகளுடன் போராடி வெற்றி பெறுவதை பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். அந்த கதாநாயர்களின் வயதுடைய ஒரு சிறுவன் ஒரு மலைப்பாம்புடன் சண்டையிட்டு அவன் வசிக்கும் இடத்தில் ஒரே இரவில் கதாநாயகனாக மாறியுள்ளான்.
வைசாக் என்னும் 12 வயது சிறுவன், மங்களூரில் உள்ள பந்த்வால் தலுக்கை சேர்ந்த சஜீபா என்னும் கிராமத்தில் தன் பெற்றோருடன் வசித்து வருகிறான். 6ம் வகுப்பு படிக்கும் வைசாக், அக்டோபர் 4ம் தேதி, அவனது வீட்டில் இருந்து பாட்டி வீட்டிற்கு செல்லும் வழியில், சாலையோர புதரில் மறைத்து இருந்த மலைப்பாம்பு ஒன்று திடீரென அவனை தாக்கியுள்ளது.
அந்த பாம்பிடம் இருந்து தப்பிய வைசாக், அவனுடைய உறவினர் வீட்டிற்கு சென்று காயங்களை காட்டியுள்ளான். அதை கண்ட அவனுடைய உறவினர், அதிர்ச்சியடைந்து, உடனே அவனை மங்களூரில் உள்ள பிரபல மருத்துவமனையான பாதர் முல்லர்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உண்மையிலேயே வைசாக் துணிச்சலான குழந்தை என்று பாராட்டினர்.
ஒரு மலைப்பாம்பு என்னை சுற்றிக்கொண்டு, என் காலை கடித்தது. அதன் பெரிய வாயை திறந்து என் கையை விழுங்க தொடங்கியது. எனக்கு அதிர்ச்சியாக இருந்ததால் என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அருகில் இருந்த கல்லை எடுத்து, அந்த மலைப்பாம்பின் கண்ணில் குத்தினேன். அதன் கண்ணில் ஏற்ப்பட்ட வலியால் என்னை போக விட்டது, என்று வைசாக் நிருபர்களிடம் கூறினான்.
மேலும், அந்த மலைப்பாம்பு கடித்த இடத்தில் விஷம் இல்லாத காரணத்தால் அவனுடைய காயங்கள் விரைவில் குணப்படுத்த சிகிச்சை அளித்து வருவதாக குழந்தை மருத்துவர் ஸ்ரீதர் அவப்ரடா கூறினார்.